*ஆட்சியர் தகவல்
ரிஷிவந்தியம் : கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், அவர் தெரிவித்ததாவது:
தமிழக அரசு ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ஊரகப் பகுதிகளில் உள்ள பொதுமக்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் அரசின் சார்பில் வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வில் பெரிய கொள்ளியூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் நாற்றங்கால் பண்ணை பணியினையும், ஜம்படை ஊராட்சியில் ரூ.8.80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிறு தானிய களம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின்போது நாற்றங்கால் பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் மரக்கன்றுகளை ஊராட்சிப் பகுதிகளில் நட்டு வளர்த்து சிறந்த முறையில் பராமரிக்கவும், தார் சாலைப் பணிகளை சரியான அளவுகளில் தரமாக மேற்கொள்ளவும், குளம் தூர்வாருதல் பணிகளை சரியான திட்ட அளவுகளின்படி மேற்கொள்ளவும், முடிவுற்ற பணிகளை உரிய முறையில் பராமரிக்கவும் நடைபெறும் பணிகளை தரமான கட்டுமானப் பொருட்களை கொண்டு கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்தார். ஆய்வின்போது துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் ஊரக பகுதிகளில் முடிவுற்ற வளர்ச்சி திட்டப் பணிகளை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் appeared first on Dinakaran.