வேலூர்: காட்பாடி அருகே ஓடும் ரயிலில் பலாத்கார முயற்சியில் ரயில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி வயிற்றில் இருந்த சிசு இறந்துள்ளதால், கைதான சைக்கோ வாலிபர் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்படுவதாக ரயில்வே போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பூரில் இருந்து காட்பாடி வரை செல்லும் கோவை-திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில், கடந்த 6ம் தேதி பெண்கள் பெட்டியில் பயணித்த சித்தூரை சேர்ந்த 36 வயது கர்ப்பிணி பெண்ணை, வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே உள்ள கீழ்ஆலத்தூரை சேர்ந்த ஹேமராஜ் (28) என்ற சைக்கோ வாலிபர் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டு காட்பாடி அருகே ரயிலில் இருந்து எட்டி உதைத்து தள்ளிவிட்டார்.
அந்த பெண் தற்போது வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஹேமராஜை போலீசார் கைது செய்ய சென்றபோது தப்பி ஓடி பள்ளத்தில் தடுமாறி விழுந்து கால் முறிவு ஏற்பட்டதால் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் போலீசார் ஹேமராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். ஏற்கனவே காதலியை பலாத்காரம் செய்து கழுத்தறுத்து கொன்ற வழக்கிலும், சென்னை பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டு ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட வழக்கிலும் 2 முறை குண்டாசில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த ஹேமராஜ், தற்போது 3வது முறையாக கைதாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பணியிடம் நேற்று முன்தினம் இரவு மாநில மகளிர் ஆணைய தலைவர் குமரி விசாரணை நடத்தி விவரங்களை கேட்டறிந்தார். அப்போது கலெக்டர் சுப்புலட்சுமி, எஸ்பி மதிவாணன் உட்பட டாக்டர்கள் உடனிருந்தனர். இதில் குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதியளித்து, ஆறுதல் கூறினர்.
இந்நிலையில் கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த 4 மாத சிசு நேற்று இறந்தது. இச்சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கலெக்டர் சுப்புலட்சுமி கூறுகையில், ‘நேற்று(நேற்று முன்தினம்) வரை வயிற்றில் உள்ள கருவின் இதயத்துடிப்பு சீராக இருந்தது. இன்று(நேற்று) காலை சோதித்தபோது அவரது கருவின் இதயத்துடிப்பு நின்று போனது தெரிய வந்தது. அவருக்கு ஏற்கனவே கை மற்றும் கால்களில் முறிவு ஏற்பட்டு அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தலையிலும் காயம் ஏற்பட்டு 11 தையல்கள் போடப்பட்டுள்ளன.
சிசுவின் இதயத்துடிப்பு நின்றுள்ளதால் அடுத்தக்கட்ட சிகிச்சையை டாக்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர்’ என்றார். கைதான ஹேமராஜ் மீது பலாத்கார முயற்சி, கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது கர்ப்பிணி வயிற்றில் இருந்த சிசு இறந்துள்ளதால், டாக்டர்கள் அறிக்கை பெற்று அதனடிப்படையில் கைதான ஹேமராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ரயில்வே போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
* ரூ.50 ஆயிரம் ரயில்வே நிதி
ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு பலத்த காயமடைந்து வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்ணை நேற்று காலை 7 மணியளவில் தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் பெண்ணை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் ரூ.50 ஆயிரம் நிவாரண உதவியை வழங்கினர்.
The post ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி வயிற்றில் இருந்த சிசு இறப்பு: சைக்கோ மீது கொலை வழக்கு appeared first on Dinakaran.