
திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் பேருந்து புதுக்கோட்டை கிராமத்திற்கு சென்றது. அந்தப் பேருந்தை ஓட்டுநர் பிரபு இயக்கிச் சென்றுள்ளார். இந்தப் பேருந்து கணக்கம்பட்டி தாண்டி புதுக்கோட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநர் பிரபுவிற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் பேருந்து ஓடும் போதே மயங்கி விழுந்தார்.
நடத்துநர் விமல், ஓட்டுநர் பிரபு மயங்கியதை பார்த்து துரிதமாக செயல்பட்டு பிரேக்கை தனது கைகளால் அழுத்தி பேருந்தை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்தை தவிர்க்கபட்டது. பேருந்து நின்றதும் பயணிகள் ஓடி வந்து ஓட்டுநர் பிரபுவை தூக்க முயன்றனர். ஆனால் கவலைதரும் விதமாக அவர் இறந்துவிட்டார்.
பேருந்தில் பயணிகள் இருந்த நிலையில் ஓட்டுநர் திடீரென மாரடைப்பால் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நடத்துநர் விமல், "என்னால முடியல நெஞ்சு வலிக்கிது விமல்னு சொல்லிக்கிட்டே அப்படியே ஸ்டீயரிங்ல இருந்து விழுந்துட்டாரு.. உடனே கைகளால் பிரேக் போட்டு பஸ்ஸை நிறுத்தி பல உயிர்களை காப்பாற்றி விட்டேன். ஆனால் டிரைவரை மட்டும் காப்பாற்ற முடியவில்லை" என சோகத்துடன் கூறினார்.