*பயணிகள் அலறல்: ஆந்திராவில் பரபரப்பு
திருமலை :ஆந்திராவில் ஓடிக்கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில், இன்ஜினில் இருந்து பெட்டிகள் கழன்றதால், பயணிகள் அலறி கூச்சலிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்திலிருந்து ஹவுரா நோக்கி செல்லும் பலக்னுமா அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
இந்த ரயில் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பலாசா ரயில் நிலையத்தை தாண்டி நேற்று காலை புறநகர் பகுதியை அடைந்து வேகமாக சென்று கொண்டிருந்த நிலையில், ரயில் பெட்டிகளை இணைக்கும் கப்ளிங் ராடு உடைந்து, கடைசியாக இருந்த 8 பெட்டிகள் தனியாக கழன்றது.
இதனை கவனிக்காத இன்ஜின் டிரைவர் ரயிலை இயக்க தொடங்கினார். கடைசியில் சில பெட்டிகள் கழன்றுவிட்டதை கவனித்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். இதற்கிடையில் இன்ஜினில் இருந்து கழன்ற கடைசி 8 பெட்டிகள் சில கிலோ மீட்டர் தூரம் ஓடிச்சென்று தானாக நின்றது. அந்த பெட்டிகளில் இருந்து பீதியுடன் கீழே இறங்கிய பயணிகள் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் ரயில்வே அதிகாரிகள் இன்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவித்து மண்டஸா ரயில் நிலையத்தில், ரயிலை நிறுத்தினர். இதற்கிடையில் கடைசி சில பெட்டிகள் தனியாக கழன்றதை அறிந்த பயணிகள் அலறியடித்தபடி உடமைகளுடன் கீழே இறங்கினர்.
தொடர்ந்து மற்றொரு இன்ஜின் வரவழைக்கப்பட்டு பலாசா ரயில் நிலையம் அருகில் நின்றிருந்த ரயில் பெட்டிகளை மண்டஸா ரயில் நிலையம் கொண்டு வந்து சம்பந்தப்பட்ட இன்ஜினுடன் இணைத்தனர்.
பின்னர் ஒரு மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. மேலும் அடுத்தடுத்து வந்த ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, தாமதமாக இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து ரயிலில் இருந்து பெட்டிகள் எவ்வாறு கழன்றது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து விவரங்களை சேகரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் நேற்று அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
The post ஓடிக்கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினில் இருந்து கழன்ற பெட்டிகள் appeared first on Dinakaran.