ஓசூர் வனக்கோட்டத்தில் 2024-25ம் ஆண்டிற்கான பறவைகள் கணக்கெடுப்பு பணி: 8, 9ம் தேதிகளில் நடக்கிறது

4 hours ago 2


ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தில் 2024&25ம் ஆண்டிற்கான பறவைகள் கணக்கெடுப்பு பணி வருகிற 8 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெறுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், காப்புக்காடுகளுக்கு வெளியில் உள்ள ஈர நிலங்களான ராமநாயக்கன் ஏரி, பாரூர் ஏரி, தளி ஏரி, கே.ஆர்.பி அணை, ஆவலப்பள்ளி அணை, பனை ஏரி உள்ளிட்ட 40 நீர்நிலைகளில், வருகிற 8 மற்றும் 9ம் தேதி என இரண்டு நாட்கள், காலை 6 மணி முதல் 11 மணி வரை பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறவுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காப்புக்காடுகள் மற்றும் காப்புக்காடுகளுக்கு வெளியிலும் அதிக எண்ணிக்கையிலான ஈர நிலங்கள் (நீர்நிலைகள், தடுப்பாணைகள், ஏரிகள், குளங்கள் குட்டைகள்) காணப்படுகின்றன. இவைகளில் பல்வேறு வகையான பறவை இனங்கள் தங்கியும், அவ்வப்போது வந்து செல்வதும் வழக்கமாகக் கொண்டுள்ளன.

எனவே, அந்த பறவைகளின் எண்ணிக்கை, இனங்கள் எந்த பகுதிகளில் எவ்வகையான பறவையினங்கள் வாழ்கின்றன என்பன போன்ற தகவல்களை கணக்கெடுத்து, அரியவகை இனங்கள் காணப்பட்டால், அதனை அழிவிலிருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. நடப்பாண்டில் தமிழ்நாடு முழுவதும், வனத்துறையின் மூலம் இரண்டு கட்டங்களாக பறவைகள் கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஈர நிலப் பகுதிகளிலும், இரண்டாம் கட்டமாக காப்புக்காடு பகுதிகளிலும் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. இதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்தில், காப்புக்காடுகளுக்கு வெளியில் உள்ள ஈர நிலப் பகுதிகளான இராமநாயக்கன் ஏரி, பாரூர் ஏரி, கெலவரப்பள்ளி அணை உள்ளிட்ட 40 நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஓசூர் கென்னத் ஆண்டர்சன் நேச்சர் சொசைட்டி தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உதவியுடன், பறவைகள் கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றும் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து, இக்கணக்கெடுப்பிற்கான ஏற்பாட்டினை செய்துள்ளனர். பறவைகள் கணக்கெடுப்பிற்காக முன் அனுபவம் மற்றும் பயிற்சி பெற்ற அலுவலர்கள் மூலம், வனப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பயிற்சி, ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் பாகான் ஜெகதீஸ் சுதாகர் தலைமையில் ஆன்லைன் மூலம் இன்று (6ம் தேதி) அளிக்கப்படவுள்ளது. வனப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தனி தனி குழுக்களாக பிரிக்கப்பட்டு, அந்தந்த பகுதிகளுக்கு வருகிற 8ம் தேதி மாலை மற்றும் 9ம் தேதி காலை அனுப்பி வைக்கப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள்.

அவர்கள் ஞாயிற்றுக் கிழமை காலை சுமார் 6 மணியளவில், ஒதுக்கப்பட்ட ஈர நில பகுதிகளில் சம்மந்தப்பட்ட வன அலுவர்களுடன் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவார்கள். கணக்கெடுப்பு பணியின் போது, அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதலுதவி பெட்டிகள் வழங்கப்படவுள்ளது. எனவே, பறவைகள் கணக்கெடுப்பில் விருப்பம் உள்ள தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் பதிவு செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகுதி உள்ள நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவ்வாறு வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

The post ஓசூர் வனக்கோட்டத்தில் 2024-25ம் ஆண்டிற்கான பறவைகள் கணக்கெடுப்பு பணி: 8, 9ம் தேதிகளில் நடக்கிறது appeared first on Dinakaran.

Read Entire Article