*உதவிக்கரம் நீட்ட வலியுறுத்தல்
ஓசூர் : ஓசூர் பஸ்நிலையத்தில் தவிக்கும் ஆதரவற்ற முதியவர்களை மீட்டு, ஆதரவற்றோர் இல்லங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓசூர் பஸ்நிலையத்திற்கு வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் பயணிகள் அதிகளவில் வந்து செல்வதால் 24 மணிநேரமும் பரபரப்பாக இருக்கும்.
இந்நிலையில் ஆதரவற்றோர் சுமார் 20க்கும் மேற்பட்டோர் ஓசூர் பஸ்நிலையத்தில் இரவு பகலாக தங்கியுள்ளனர். இவர்களை மீட்டு அரசு மற்றும் தொண்டு நிறுவன காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபற்றி அவர்கள் கூறுகையில், ‘ஓசூர் பஸ்நிலையத்தில் ஏராளமான ஆதரவற்ற முதியவர்கள் தங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பஸ்நிலையத்துக்கு வரும் பயணிகளிடம் யாசகம் பெற்று வாழ்ந்து வருகின்றனர். ஒரு சில முதியவர்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டும், உடலில் காயங்களுடன் மருத்துவ சிகிச்சையின்றி பசியும், பட்டினியுமாக படுத்த படுக்கையாக உள்ளனர்.
முதியவர்கள் யாசகம் பெற்று சேமித்து வைத்துள்ள பணத்தை இரவு நேரங்களில் மர்மநபர்கள் பறித்துச் செல்லும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது. அவர்களை மீட்டு ஆதரவற்றோர் இல்லம் மற்றும் தொண்டு நிறுவன காப்பகங்களில் சேர்த்து, மருத்துவ உதவிகளை வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
The post ஓசூர் மாநகர் பஸ் நிலையத்தில் தவிக்கும் ஆதரவற்ற முதியவர்கள் appeared first on Dinakaran.