*1,382 தன்னார்வலர்கள் பங்கேற்பு
தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் முழுவதும் நேற்று (8ம் தேதி) முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற வீடு, வீடாக விண்ணப்பம் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது.
தமிழக அரசு பெண்கள் முன்னேற்றத்துக்காக, மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதி வாய்ந்த ஒரு கோடியே 14 லட்சம் பெண்கள் இத்திட்டத்தில் பயனாளிகளாக உள்ளனர். இன்னும் சிலர் தகுதி இருந்தும், இந்த திட்டத்தில் சேர விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.
இத்திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்துள்ள தகுதியான அனைவருக்கும் 3 மாதத்தில் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி தெரிவித்தார்.
இதையடுத்து, இதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மகளிர் உரிமைத்தொகை பெற, நேற்று முதல் தர்மபுரி மாவட்டத்தில் விண்ணப்பங்கள் வீடு, வீடாக விநியோகிக்கப்படுகிறது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் உள்ள தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரி ஒன்றியம், உங்கரானஅள்ளி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு, வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் சதீஸ் நேற்று நேரில் பார்வையிட்டு, விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடுகளை வழங்கினார்.
இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் சதீஸ் கூறியதாவது: தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்துகளில், 10 ஆயிரம் சிறப்பு முகாம்களை நடத்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தினை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்களுக்கு தேவைப்படுவதாக கண்டறியப்பட்டுள்ள சேவைகள் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் ஜூலை 15ம் தேதி முதல்வரால் தொடங்கி வைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், தர்மபுரி மாவட்டத்தில் நேற்று (8ம்தேதி) முதல், தன்னார்வலர்கள் மூலம் அரசுத்துறைகளின் சேவைகள் மற்றும் திட்டங்கள் குறித்து, அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று தகவல் கையேடுகள் மற்றும் விண்ணப்பங்கள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக மாவட்டத்தில் சுமார் 1,382க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள, விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் தங்களது விண்ணப்பத்தினை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பம், உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்.
மேலும், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்துகளில் வரும் 15ம்தேதி முதல் வரும் அக்டோபர் 15ம்தேதி வரை 176 முகாம்கள் நடைபெற உள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். அப்போது, தர்மபுரி தாசில்தார் சண்முகசுந்தரம் மற்றும் தன்னார்வலர்கள் உடனிருந்தனர்.
The post மாவட்டம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற வீடு, வீடாக விண்ணப்பம் விநியோகம் appeared first on Dinakaran.