ஓசூர்: ஓசூர் அருகே இன்று காலை கேரளா மாநிலத்திற்கு பால் கொண்டு சென்ற டேங்கர் லாரி கவிந்து விபத்துக்குள்ளானதில் லாரி ஓட்டுநர் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அடுத்த உத்தனபள்ளி அருகே ராய் கோட்டை சாலையில் கரடிக்குட்டை என்ற பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கர்நாடகா மாநிலத்திலிருந்து கேரளாவிற்கு டேங்கர் லாரி மூலம் சுமார் 28 ஆயிரம் லிட்டர் பால் ஏற்றி கொண்டு சென்ற லாரி சாலை ஓரமாக எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கூடலூர் பகுதியை சேர்ந்த டிரைவர் ராஜேஷ்குமார் மற்றும் அவருடன் பயணம் செய்த அருள் என்ற இருவரும் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். டேங்கர் லாரியின் மேல் பகுதியில் உள்ள மூடி கழண்டு விழுந்ததில் பால் முழுவதும் வெளியேறி ஆறாக அப்பகுதியில் ஓடியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உத்தனபள்ளி போலீசார் இருவரின் உடலையும் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஓசூர் அருகே பால் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.