ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே ஜூஜூவாடி பகுதியில் பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடி அமைந்துள்ளது. இந்த சோதனைச்சாவடியில் கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்திலிருந்தும், வட மாநிலங்களிலிருந்தும் தமிழகத்திற்கு வரும் வாகனங்கள், தமிழகத்திலிருந்து கர்நாடகம், ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் வாகனங்கள் பதிவு மற்றும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சோதனை சாவடியில், பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், வாகன ஓட்டுநர்களிடம் லஞ்சம் வசூலித்து வருவதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இதன்பேரில், அங்கு லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று அதிகாலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 41 ஆயிரத்து 50 பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அங்கு பணியில் இருந்த ஆடிஓ உதவியாளர் காயத்ரி மற்றும் ஊழியர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து வாகன சோதனை நடைபெற்றது.
The post ஓசூர் அருகே ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் ரெய்டு: ரூ.2.41 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.