சென்னை: ஓசூரில் ரூ.3699 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட உள்ள டாடா நிறுவனத்திற்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் தொழில் நகரங்களாக உருவெடுத்து வருகிறது. அதன்படி ஓசூரில் 1.49 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.3051 கோடி முதலீட்டில் செயல்பட்டு வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலை மேலும் 5 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவிற்கு ரூ.3699 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. தற்போது இந்த தொழிற்சாலையில் தினசரி 92,000 மொபைல் போன்கள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், தினசரி 2 லட்சம் மொபைல் போன்களை உற்பத்தி செய்யும் வகையில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் தான் ‘ஆப்பிள் ஐபோன்’ உற்பத்தி செய்ய டாடா எலக்ட்ரானிக்ஸ் முடிவு செய்துள்ளது. இந்த தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில், தற்போது தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையம் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இதன் மூலம் 80,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
The post ஓசூரில் விரிவாக்கம் செய்யப்பட உள்ள டாடா நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி: 80,000 பேருக்கு வேலைவாய்ப்பு appeared first on Dinakaran.