
புதுடெல்லி,
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் கடந்த 2001-2006-ம் ஆண்டுகளில் வருவாய்த்துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம், தனது பதவி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1 கோடியே 77 லட்சம் அளவுக்கு சொத்துகள் குவித்ததாக, 2006-ம் ஆண்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை திரும்ப பெற அனுமதித்தும், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்தும் சிவகங்கை கோர்ட்டு கடந்த 2012-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்ததுடன் மறு விசாரணை செய்யவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. இதனிடையே இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ராஜேஷ் பிந்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மறுவிசாரணை மீதான இடைக்கால தடையை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கை வேறு அமர்வு விசாரிக்கும் என்றும் தெரிவித்தனர்.