
சென்னை,
திஞ்சித் அய்யாதன் இயக்கத்தில் மர்ம திரில்லர் கதை களத்தில் உருவான படம் 'கிஷ்கிந்தா காண்டம்'. இப்படத்தில் ஆசிப் அலி , விஜயராகவன் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த செப்டம்பர் 12-ந் தேதி வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
நடிகர் ஆசிப் அலி முன்னணி கதாபாத்திரத்தில் அதிக வசூல் செய்த படங்களில் இதுவும் ஒன்றாகம். இப்படம் 2024 -ம் ஆண்டு அதிக வசூல் செய்த 9-வது மலையாளப் படமாகும். இப்படத்திற்கு கதை திரைக்கதையை எழுதியவர் பாஹுல் ரமேஷ். இவரே இப்படத்திற்கு ஒளிப்பதிவும் செய்துள்ளார்.
இப்படம் உணர்ச்சிகரமான ஒரு கதையின் நடுவில் பார்வையாளர்களை யூகிக்க வைப்பதில் சிறந்து விளங்குகிறது. ரூ. 7 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவான இப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பதிவு செய்து, தற்போது வரை ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் மாதம் 1-ந் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது.
