
சென்னை,
கவிஞர் வைரமுத்து, சித்திரை திருநாளையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
வா மெல்ல வா. பங்குனியின் கருவறைவிட்டுப் பார்த்துவா சித்திரையே. வரும் வழியெங்கும் மரம் செடிகொடிகளில் கையொப்பமிட்டுக் கடந்துவா. மலர்ந்த மலர்களில் தேனெடுத்துக் குயில்களின் தொண்டையில் ஊற்றிவிட்டு வா. புவிச்சூடு தாங்காத பூமிக்கு மேகங்களால் வெண்கொற்றக் குடைபிடி. காற்றின் ஈரத்தைக் கொள்ளை கொள்ளாத குளிர்ப்பதம் கொடு. மனித வாசல்கள்தோறும் மகரந்தக் கோலமிடு.
பூமிக்கு மகிழ்ச்சியைப் பொதுவுடைமை செய். தேர்வெழுதும் பிள்ளைகளுக்குத் தென்றல் கவரிகொண்டு வா. நாளும் உழைக்கும் மனித வாழ்க்கையில் நம்பிக்கை எழுதிப்போ. மதவாதம், ஊழல், பசி, பட்டினி என்ற சொற்களை ஒவ்வொரு மொழியிலும் உருவி உதறிவிடு. எங்கே ஒரு மாலை மழை சிதறு. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு பொற்காசு போட்டுப்போ. தங்கம் விலை இன்னும் கூடுவதற்கு முன்னால் ஒரு கொடை கொடு. வா சித்திரையே வா மெல்ல வா.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.