ஒவ்வொரு மண்டலத்துக்கும் தனி கவனம் பார்த்து பார்த்து செய்த பணிகள்… மழை நின்றதும் மாயமான வெள்ளம்: மகிழ்ச்சியில் திளைத்த சென்னை மக்கள்

1 month ago 6

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வரலாறு காணாத மழை வெள்ளம், சிங்கப்பூரில் வெள்ளம், ஏன் பாலைவனமான துபாயில் வெள்ளம் என்றெல்லாம் பார்த்தவுடன் அதை செய்தியாக கடந்து விடுகிறோம். சென்னையில் வெள்ளம் வந்தவுடன்தான் அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் ஆளும்கட்சி மீது குற்றம்சாட்டுவது வாடிக்கை. ஆனால், சென்னையில் கடந்த திங்கட்கிழமை இரவு முதல் தொடர்ந்து கொட்டிய கனமழைக்கு சென்னை நகரின் முக்கிய இடங்களில் தண்ணீர் தேங்கியது.

ஆனால் மழைவிட்ட சில மணி நேரங்களில் தண்ணீர் எல்லாம் காணாமல் போய்விட்டது. அரசு கொடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. தனியார் நிறுவனங்களிலும் வீட்டில் இருந்து பணியாற்றும்படி உத்தரவிடப்பட்டது. இவ்வளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால், பொதுமக்கள் வீடுகளில் பதுங்கிக் கொண்டனர். ஆனால் செவ்வாய்க்கிழமை மாலை மற்றும் இரவு நேரத்தில், வௌியில் வந்து பார்த்தவர்களுக்கு கடும் அதிர்ச்சி. சாலைகளில் தண்ணீர் எங்கும் தேங்கவில்லை. சுரங்கப்பாதைகளில் தண்ணீர் இருந்த சுவடே இல்லை.

வடசென்னை பகுதி தண்ணீரில் மிதக்கும். 10 முதல் 15 நாட்களுக்கு அவர்கள் தண்ணீரோடுதான் வாழ்வார்கள். அதேநிலைதான் தி.நகர், பாண்டிபஜார், சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரி, மடிப்பாக்கம் போன்ற பகுதிகளிலும் இருக்கும். ஆனால் இந்த பகுதிகளில் தண்ணீர் இல்லை. மக்களால் அவர்கள் கண்களையே நம்பமுடியவில்லை. முதல்நாள் மழை கொட்டுகிறது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி எதிர்க்கட்சிகள், 2 நாள் கழித்து மழை குறைவுதான். அதனால்தான் தண்ணீர் இல்ைல என்று தங்களை மட்டும் திருப்திப்படுத்திக் கொள்ள அறிக்கை விட்டு ஆறுதல் அடைந்து கொண்டனர்.

ஆனால், சென்னையில் மழை வெள்ளம் முழுமையாக வடிந்ததற்கு காரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோர் அயராது உழைத்தது. மாநகராட்சி, போலீஸ், நீர்வளத்துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகளை ஒருங்கிணைப்பு செய்ததோடு, முன்கூட்டியே திட்டமிட்டு பல நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்திருந்தார். மழை வரும் என்று தெரிந்து பல முறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதற்காக தலைமைச் செயலாளர் முருகானந்தத்திற்கும் சில சிறப்பு உத்தரவுகளை வழங்கினார். இதனால் அவரும் அடிக்கடி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து, பல அதிரடி நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டிருந்தன. குறிப்பாக, நீர்வளத்துறை செயலாளர் மணிவாசனுக்கு சிறப்பு உத்தரவுகளை முதல்வர் மு.க.ஸ்டாலினும், தலைமைச் செயலாளர் முருகானந்தமும் வழங்கினர். அதன்படி நீர்வளத்துறை சார்பில் பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து நீர்வளத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கைகள் நீர்வளத்துறை சார்பில் எடுக்கப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் ரூ.35 கோடி ஒதுக்கப்பட்டது. அதை வைத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் காலியான சிமென்ட் பைகள், மணல் மூட்டைகள், மணல் கையிருப்பு, சவுக்கு கட்டைகள் வாங்கி வைக்கப்பட்டன. ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் உடைந்தால் உடனடியாக அவற்றை அடைக்கவும், பெரும் சேதம் வராமல் தவிர்க்கவும் இந்த நடைமுறைகள் தயாராக வைத்திருந்தனர்.

சென்னையில் பெரு மழை பெய்ய தொடங்கியவுடன் நாராயணபுரம் ஏரியின் ஒரு பகுதியை நீர்வளத்துறை அதிகாரிகள் உடைத்து தண்ணீரை திறந்தனர். ஆனால், பொதுமக்களே தண்ணீரை திறக்க வேண்டாம். தண்ணீர் அதிகமாக வெளியேறினால், மழை நின்றவுடன் இந்த பகுதியில் நீர்வளம் குறைந்து விடும் என்று கேட்டுக் கொண்டனர். அதன்பின்னர் நீர்வளத்துறை அதிகாரிகள் அடைத்தனர். இதனால் கடந்த முறை போல இந்த முறை நாராயணபுரம் ஏரி சிறிய மழைக்கு உடையவில்லை.

அதை தவிர, சென்னையின் முக்கிய ஆறுகளான வடக்கு பக்கிங்காம் கால்வாய், தெற்கு பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலை ஆறு, கூவம், முட்டுக்காடு முகத்துவாரம் ஆகியவைதான் முக்கியமானவை. இவைகள் முறையாக இருந்தால் பெரு வெள்ளம் தவிர்க்கப்படும். இதனால் இந்த கால்வாய்களை ஏற்கனவே பலமுறை தூர்வாரியதோடு, ஆகாய தாமரைகள் அகற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்திருந்தோம். இதுதவிர ஒவ்வொரு ஆறு இருக்கும் பகுதிகளில் இயந்திரங்களை தயாராக வைத்திருந்தோம்.

அதில் வடக்கு பக்கிங்காம் கால்வாய்க்கு 9 பொக்லைன் இயந்திரங்களை வைத்திருந்தோம். 5 மிதக்கும் பொக்லைன்களையும் ஆற்றில் இறக்கியிருந்தோம். 8 டிப்பர் லாரிகளை தயாராக வைத்திருந்தோம். அதேபோல தெற்கு பக்கிங்காம் கால்வாய்க்கு 4 பொக்லைன், 2 மிதக்கும் பொக்லைன், 6 டிப்பர் லாரிகளை தயாராக வைத்திருந்தோம். கொசஸ்தலை ஆறுக்கு 2 பொக்லைன், கூவம் ஆற்றுக்கு 3 பொக்லைன், 2 டிப்பர் லாரிகள், முட்டுக்காடு முகத்துவாரம் பகுதிக்கு 8 பொக்லைன், 2 டாரஸ், 9 டிப்பர் லாரிகள் வைத்திருந்தோம்.

மொத்தமாக 40 பொக்லைன்கள், 23 டிப்பர் லாரிகள் தயாராக வைத்திருந்தோம். இந்த இயந்திரங்கள் எல்லாம் மண்டலம் வாரியாக பிரித்து அந்தந்த பகுதிகளில் வைத்து பணிகளை தீவிரப்படுத்தினோம். ஒவ்வொரு மண்டலத்திற்கு ஒரு சிறப்பு அதிகாரியை நியமித்திருந்தோம். இவர்கள் மழை கொட்ட ஆரம்பித்தவுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் வழித்தடத்தை சரி செய்தபடியே இருந்தனர். பருவமழைக்காக சிறப்பு நிதியாக ரூ.3.5 கோடி ஒதுக்கப்பட்டு இந்த பணிகள் நடந்தன. அதன்பின்னர் ரூ.2.3 கோடி ஒதுக்கப்பட்டது.

மொத்தம் மழையின்போது 13 வகையான பணிகளை நாங்கள் செய்தோம். ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு செயற்பொறியாளர் தலைமையில் 23 சிறப்பு அதிகாரிகளை நியமித்தோம். சேப்பாக்கத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்தில் மட்டும் 10 உதவி செயற்பொறியாளர்களை நியமித்திருந்தோம்.

அதோடு வெளிமாவட்டத்தில் இருந்து 38 தலைமை பொறியாளர்கள் சென்னைக்கு வரழைக்கப்பட்டு அவர்களுக்கும் தனித்தனி குழுக்கள் கொடுக்கப்பட்டு நீர் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இவ்வாறு மாநகராட்சி, போலீஸ், தீயணைப்புத்துறை அதிகாரிகளுடன் இணைந்து நாங்களும் சிறப்பாக பணியாற்றினோம். இதனால் தேங்கியிருந்த தண்ணீர் கால்வாயில் முறையாக சென்று கடலில் கலக்கும் பணியை செய்து முடித்தோம் என்றார்.

* கொளத்தூர் தப்பியது எப்படி?
ஒவ்வொரு முறையும் வடசென்னை பகுதி முழுவதும் தண்ணீரில் மிதக்கும். இந்த முறை அப்படி இல்லை. அதற்கு காரணம், ஒவ்வொரு தொகுதிக்கும் நீர்வளத்துறையின் சார்பில் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு அதற்கென்று சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தன. அதன்படி கொளத்தூரில் தண்ணீர் அதிகமாக தேங்குகிறது. அதோடு, கொரட்டூர், மாதவரம் ஏரியில் இருந்து தண்ணீர் கொளத்தூர் பகுதிக்குத்தான் வரும். இதனால் தண்ணீர் வெளியேறாமல் இருக்கும்.

கொளத்தூரில் இருந்து 400 கன அடி தண்ணீர் வெளியேறும் வகையில் ஒரு சிறப்பு கல்வாய் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது அதை பெரிதாக்கி 1000 கன அடி தண்ணீர் செல்லும் வகையில் சுமார் 14 கி.மீ. தூரத்திற்கு கால்வாய் அமைத்திருந்தோம். 91 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டம் செய்யப்பட்டிருந்தது. கொளத்தூரில் உள்ள தண்ணீர், இந்த கால்வாய் மூலம் கொடுங்கையூர் பகுதி வழியாக கடலுக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்திருந்தோம்.

இதனால் ஒரே நேரத்தில் ஆயிரம் கன அடி நீர் வெளியேறியதால், கொளத்தூரில் மழை விட்டவுடனே தண்ணீர் வடிந்து விட்டது. தற்போது கொளத்தூர் பகுதி மக்கள் இதனால் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இந்த திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் குறைந்தது 5 முறையாவது பார்வையிட்டு அதிகாரிகளுக்கு உத்தரவுகளை வழங்கியிருப்பார். நேற்று கூட அந்த கால்வாய் பகுதிகளை முதல்வர் பார்வையிட்டார் என்கின்றனர் நீர்வளத்துறை அதிகாரிகள்.

The post ஒவ்வொரு மண்டலத்துக்கும் தனி கவனம் பார்த்து பார்த்து செய்த பணிகள்… மழை நின்றதும் மாயமான வெள்ளம்: மகிழ்ச்சியில் திளைத்த சென்னை மக்கள் appeared first on Dinakaran.

Read Entire Article