நன்றி குங்குமம் தோழி
எத்தனை விதமான ஆடைகள் இருந்தாலும் கைத்தறியால் நெய்யப்பட்ட ஆடைகளை அணியும்போது தனித்துவமான தோற்றத்தையும் உணர்வையும் கொடுக்கும். இந்த கைத்தறி ஆடைகள்தான் கடந்தாண்டு கோவாவில் நடைபெற்ற நேஷனல் டிசைனர் அவார்ட் (National Designer Award 2024) நிகழ்ச்சியில் விருதினை பெற்றிருக்கிறது. ஆடை வடிவமைப்பாளர்களுக்கான இந்தப் போட்டியில் கலந்து கொண்ட கிருத்திகா சந்திரன் கைத்தறியால் நெய்யப்பட்ட ஆடைகளை பாரம்பரியம் கலந்த தோற்றத்தில் வடிவமைத்து காட்சிப்படுத்தியிருந்தார்.
இவரின் ஆடை வடிவமைப்பை கௌரவிக்கும் விதமாக இந்த ஆண்டுக்கான ‘சிறந்த வடிவமைப்பாளர்’ விருதும், கைத்தறியால் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட ஆடைக்காக Best Sustainable Ethnic Design of the Year என்ற விருதும் வழங்கப்பட்டது. வேர்ல்ட் டிசைனிங் ஃபோரம் நடத்திய இந்தப் போட்டியில் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த கிருத்திகா சந்திரனுக்கு சிறந்த வடிவமைப்பாளர் விருது கிடைத்திருப்பது, நெசவாளர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. விருது பெற்ற அனுபவத்தையும் கைத்தறி நெசவுத் தொழிலை மீட்டமைக்கும் ஆர்வத்தையும் நம்முடன் பகிர்கிறார் ஆடை வடிவமைப்பாளர் கிருத்திகா சந்திரன்.
“ஆடை வடிவமைப்பாளர்களுக்கான போட்டியில் விருது கிடைத்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கிறது. அதுவும் கைத்தறி ஆடைகளுக்கு மரியாதை கிடைத்ததில் கூடுதல் மகிழ்ச்சி. பல்வேறு மாநிலங்களிலிருந்து 300 போட்டியாளர்கள் இதில் பங்கேற்றனர். ஆடை வடிவமைப்பாளர்களுக்கான போட்டி பற்றி தெரிந்ததுமே இதில் தனித்துவமாக வடிவமைப்பை காட்சிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம்தான் முதலில் ஏற்பட்டது. தமிழ்நாட்டு பாரம்பரியத்தின் அடிப்படையில் நான் ஒரு தீம் அமைத்தேன். ஆடையை வடிவமைக்க கைத்தறி துணியைத்தான் பயன்படுத்தினேன். நம் பாட்டி காலத்தில் சேலையை பின்பக்கம் கொசவமாக வைத்து கட்டுவார்கள்.
இது சேலை கட்டுவதில் ஒரு முறைதான். இதை அடிப்படையாகக் கொண்டு இரண்டு ஆடைகளை வடிவமைத்திருந்தேன். ஆடைகளை காட்சிப்படுத்த மாடல்கள் பலரும் நியமிக்கப்பட்டிருந்தனர். என் உடையினை அணிந்த மாடல்கள் என்னிடம் ‘இந்த உடை மிகவும் புத்துணர்வாக உணரவைக்கிறது. ஆடையை உடுத்த வசதியாக இருக்கிறது’ என்றார்கள். இதுதான் கைத்தறி ஆடைகளின் சிறப்பு. மற்றொரு பாரம்பரியமான ஆடையை காதி காட்டன் வைத்து வடிவமைத்திருந்தேன். இது ஒரு போட்டி என்பதையும் தாண்டி கைத்தறி ஆடைகள் குறித்து அவர்கள் சொன்ன கருத்து என் மனதில் குளிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தத் தருணத்தில் விருதுகள் பற்றியெல்லாம் நான் சந்திக்கவில்லை. நான் வடிவமைத்த ஆடையை அணிந்திருந்த மாடலுடன் நான் கைகோர்த்து மேடையில் நடந்து வந்த அந்தத் தருணம் எதையோ சாதித்த உணர்வைக் கொடுத்தது.
ஆடைக்கு ஏற்ப அணிகலனும் தமிழ்நாட்டு பாரம்பரிய நகைகள்தான். ஆடையின் இருக்கைகளில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தை அலங்கார கற்களால் வடிவமைத்திருந்தேன். நான் ஃபேஷன் டெக்னாலஜி படிக்கும் போது கல்லூரி இறுதி ஆண்டில் இதுபோன்ற போட்டிகள் நடைபெறும். படிப்பை முடித்து 20 ஆண்டுகள் ஆன நிலையிலும் இந்தப் போட்டி கல்லூரி நாட்களை நினைவுப்படுத்தியது. போட்டியின் இறுதியில் Best Designer of the Year 2024 என்று சொல்லி என் பெயரை அறிவித்தபோது மகிழ்ச்சியில் ஸ்தம்பித்து நின்றேன்.
இது அனுபவம் வாய்ந்த ஆடை வடிவமைப்பாளர்களுக்கான பிரிவில் எனக்கு கிடைத்த ஒரு விருது. இது மட்டுமில்லாமல் பாரம்பரியம் சார்ந்த சிறந்த ஆடை வடிவமைப்புகளுக்கான Best Sustainable Ethnic Design of the Year என்ற விருதுக்கும் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். இரட்டை விருதினை கையில் ஏந்திய போது நம் தமிழ்நாட்டு பாரம்பரியம் மற்றும் கைத்தறி ஆடைகளின் சிறப்பினை மேடையேற செய்துவிட்டேன் என்ற மன நிறைவு ஏற்பட்டது’’ என்றவர் ஃபேஷன் டிசைனரான தன் பயணத்தை எடுத்துரைத்தார்.
“அடிப்படையில் நான் நெசவாளர் குடும்பத்தை சார்ந்த பெண். மதுரையில் தாத்தா காலத்தில் இருந்து அப்பா காலம் வரை கைத்தறி நெசவுத் தொழில்தான் செய்து வந்தனர். என் கொள்ளு தாத்தா கைத்தறி நெசவுக்கு பெயர் போனவர். அவரை எல்லோரும் பட்டுக்காரர் என்றுதான் அன்போடு அழைப்பார்கள். என் தாத்தா ராட்டை இயந்திரத்தை வைத்து தறி நெய்வது இன்றளவும் என் கண்ணுக்குள்ளாவே நிற்கிறது. அவரைத் தொடர்ந்து என் அப்பாவும் நெசவுத் தொழில் செய்து வந்தார். 90 காலக்கட்டத்தில் மதுரையில் வெள்ளம் ஏற்பட்ட போது பெரும்பாலான நெசவாளர்கள் கைத்தறி நெசவுத் தொழிலை கைவிட்டுவிட்டு வேறு பிழைப்புகளை தேடி சென்றனர். அன்று நெசவுத் தொழில் செய்பவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.
என் தாத்தாவும் அப்பாவும் நெசவு செய்வதை பார்த்துதான் நான் வளர்ந்தேன். அப்பாவுக்கு கைத்தறி நெசவு மீது கொள்ளை பிரியம். நானும் இது தொடர்பாக ஏதேனும் செய்ய வேண்டும் என்பது அப்பாவின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதன் காரணமாகவே என்னை ஃபேஷன் டெக்னாலஜி படிக்க வைத்தார். ஆரம்பத்தில் எனக்கு பெரிதாக ஆர்வம் இல்லை. ஆனால் அப்பா அடிக்கடி உடை மிகவும் அத்தியாவசியமானது மட்டுமின்றி மதிக்கத்தக்கது என்று சொல்லிக்கொண்டே இருப்பார். நான் கல்லூரி முதலாமாண்டு படிக்கும் போது அப்பா இறந்துவிட்டார். அப்பாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் படித்து காலேஜ் டாப்பரானேன். திருப்பூரில் வேலைக்கு சேர்ந்தேன்.
திருமணத்திற்குப் பிறகு சொந்தமாக பொட்டிக் ஒன்றை தொடங்கினேன். நான் கற்றுக்கொண்ட அத்தனை திறமைகளையும் வைத்தே ஆடைகளை வடிவமைத்தேன் வாடிக்கையாளர்களுக்கு என் டிசைன் பிடித்துப் போனது. ஆடை வடிவமைப்பை பொறுத்தவரை ஒவ்வொருவரின் தேவையை அறிந்து செய்வேன். எனக்கு குழந்தை பிறந்த போது என்னால் முழுமையாக ஈடுபட முடியவில்லை என்றாலும், வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது டிசைன் செய்து கொடுத்து வந்தேன். என் மகள் வளர்ந்ததும், ‘Tanyasree Tailoring Studio’ என்ற பெயரில் பொட்டிக் திறந்தேன். மீண்டும் வாடிக்கையாளர்களின் அன்பும் ஆதரவும் எனக்கு கிடைத்தது. அந்த ஆதரவுதான் போட்டியில் கலந்துகொள்ள என்னை ஊக்குவித்தது.
நெசவுத் தொழிலாளர்கள் குறித்து என் அப்பா ஒரு ப்ராஜெக்ட் செய்திருந்தார். பல்வேறு இடங்களுக்கு சென்று நெசவுத்தொழில் செய்யும் தொழிலாளர்களிடம் நேரடியாக சென்று கைத்தறி நெசவுத்தொழிலின் நுணுக்கங்கள், அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் வாழ்வாதாரம் பற்றி நேரடியாக ஆராய்ந்தறிந்து கட்டுரை ஒன்றை எழுதி வைத்திருந்தார். அப்பா இறந்த பிறகுதான் அம்மா அதை கொடுத்தார். அதை படித்த பிறகு ஒவ்வொரு நூலில் உள்ள நெசவாளர்களின் உழைப்பு புரிந்தது. ஆடைகளை வீண் செய்யவே கூடாது என முடிவு செய்து சஸ்டெயினபில் ஆடைகளை வடிவமைக்க ஆரம்பித்தேன். அதன் முதல் படியாக என் பாட்டியின் பட்டுப் புடவையில் என் மகளுக்கு பிராக் தைத்துக் கொடுத்தேன்.
அதனைத் தொடர்ந்து சேலைகளை தானமாக கொடுக்க விரும்புகிறவர்களிடமிருந்து சேலைகளை சேகரித்து அவற்றை அழகான உடைகளாக மாற்றி ஆதரவற்ற இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தேன். என் தாத்தா, அப்பாவை தொடர்ந்து நானும் கைத்தறி நெசவுத் தொழிலை மீட்டெடுக்க வேண்டும் என்கிற முயற்சியில் இருக்கிறேன். கைத்தறி நெசவுப்பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினால்தான் அதனை பற்றி எல்லோருக்கும் தெரியும்.
நெசவாளர்களின் தனிப்பட்ட வாழ்வில் எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும் அவர்களின் வேலையை சிறப்பாக செய்து கொண்டுதான் இருந்திருக்கின்றனர். கைத்தறி ஆடைகளின் விலை அதிகமாக இருக்கிறது என்றால் நெசவாளர்களின் எண்ணிக்கை குறைவதும் ஒரு காரணம். கைத்தறி நெய்ய எடுத்துக்கொள்ளும் நேரம் மற்றும் உழைப்பை கருத்தில் கொண்டு பலரும் இதில் சிரமம் இருப்பதாக நினைக்கின்றனர். ஆனால் அவ்வளவுக்கு பிறகும் கடைசியில் நம் கைகளில் கிடைக்கின்ற ஆடையை அணியும் போது கிடைக்கின்ற உணர்வு தனித்துவமானது” என்கிறார் கிருத்திகா.
தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்
The post ஒவ்வொரு நூலிலும் நெசவாளர்களின் உழைப்பு உள்ளது! appeared first on Dinakaran.