
புதுடெல்லி,
செல்ல பிராணிகள் செய்யும் சேட்டைகள் அதனை வளர்ப்பவர்களுக்கு சில நேரம் கஷ்டம் ஏற்படுத்தினாலும், பல வகைகளில் பயனுள்ளவையாகவும் இருக்கும். அதனால், மன அழுத்தத்தில் இருந்து விடுபடுதல், சுறுசுறுப்படைதல், உற்சாகம் ஏற்படுதல் போன்ற பல பலன்களும் கிடைக்கும்.
இதுபோன்ற வளர்ப்பு பிராணிகளின் வேடிக்கையான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்து வைரலாவதுண்டு. அவற்றில் வளர்ப்பு நாய் ஒன்று புத்திசாலித்தனத்துடன் தெருவில் செல்லும் பழ விற்பனையாளர் ஒருவரிடம் வாழைப்பழம் வாங்கி சாப்பிடும் வீடியோ வைரலாகி வருகிறது.
அழகான, சின்ன, பழ வரி வசூல் செய்பவர் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டு உள்ள அந்த வீடியோவில், கோல்டன் ரெட்ரீவர் வகையை சேர்ந்த வளர்ப்பு நாய் ஒன்று, வீட்டின் வாசல் சுவரின் மீது முன்னங்கால்களை பரப்பியபடி நிற்கிறது. அப்போது, அந்த வழியே பழ விற்பனையாளர் ஒருவர் வருகிறார்.
அவர் அந்த தெருவில் உள்ளவர்களிடம் பழங்களை விற்பனை செய்வதற்காக அடிக்கடி வருபவர். இந்த வீட்டின் வழியே செல்லும்போது, நாயுடன் கொஞ்சி பேசுவார். அவரை பார்த்ததும், தெரிந்தவர் வருகிறார். நமக்கு பழம் கிடைக்க போகிறது என்ற உற்சாக மிகுதியில், தன்னுடைய வாலை நாய் ஆட்டுகிறது. அவர் அந்த வீட்டின் அருகே வந்ததும் புன்னகைத்தபடி பழ வண்டியை நிறுத்துகிறார்.
அவர், நாயின் உரிமையாளரிடம், நேற்று வாழைப்பழம் ஒன்றை வாயில் வைத்தபடி அது தூங்கியது என கூறுகிறார். பின்னர் வாழைப்பழம் ஒன்றை எடுத்து கொண்டு, நாயின் அருகே வந்து, அதனை 3 துண்டுகளாக்கி ஒவ்வொன்றாக நாய்க்கு கொடுக்கிறார். சுவரின் மேல் பகுதியில் அவற்றை ஒவ்வொன்றாக வைத்ததும், அதுவும் வாழைப்பழ துண்டுகளை அப்படியே சாப்பிடுகிறது. இது முடிந்ததும், நம்ம வேலை முடிந்து விட்டது என்பதுபோல், அமைதியாக அந்த இடத்தில் இருந்து கீழே குதித்து செல்கிறது.
இந்த வீடியோ, மிஸ்ஈவாவின் பெட்ஹவுஸ் என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டு உள்ளது. வீடியோவை 46 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் தெரிவித்து உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் விமர்சனங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
அதில் ஒருவர், மனதளவில் பணக்காரர் என்றும் அவருடைய கருணையான செயலை லட்சக்கணக்கானோர் பார்த்து கொண்டிருக்கின்றனர் என்பது கூட தெரியாமல் சகோதரர் உள்ளார் என்று மற்றொருவரும் பழ விற்பனையாளருக்கு பாராட்டு தெரிவித்தனர். மற்றொரு நபர், எங்களுடைய நாயும் இதேபோன்றுதான். அது, தக்காளி வரி வசூல் செய்யும் என்று பதிவிட்டு உள்ளார்.