ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில்

4 hours ago 2

பெரும்பாலான கிராமங்களில் மாரியம்மன் அல்லது காளியம்மன் பெயரில் ஆலயம் அமையப்பெற்றிருக்கும். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள ஒழுகை மங்கலம் கிராமத்தில் மாரியம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரசித்தி பெற்ற ஒரு தலம் சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

சுயம்புவாக வெளிப்பட்ட அம்மன்

புராண காலத்தில், இந்த இடம் அடர்ந்த காடுகளாக இருந்தது. இந்த வனத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கமாக இருந்து வந்தது. அப்போது ஒரு நாள் மாடு மேய்ப்பவர், தனது பசு ஒரு இடத்தில் நின்று தானாகவே பால் சுரந்து பூமியில் வழிந்தோடுவதை கண்டார். இதை பார்த்ததும் அவர் மிகுந்த ஆச்சரியம் அடைந்தார். மறுநாளும் அதே இடத்தில் அந்த பசு பால் சொரிவதை கண்டார். இவ்வாறு தினமும் இந்த நிகழ்வு நடந்தது. இதையடுத்து அந்த இடத்தில் ஏதோ அற்புத சக்தி இருப்பதை உணர்ந்த அவர், அந்த இடத்தை தோண்டினார். அப்போது அங்கு மாரியம்மன் சிலை வெளிப்பட்டது. அன்னையே தான் இருக்கும் இடத்தை இந்த நிகழ்வின் மூலம் உணர்த்தியுள்ளதை மக்கள் அறிந்தனர். பின்பு சுயம்புவாக வெளிப்பட்ட அந்த அம்மனை அந்த பகுதி மக்கள் வழிபட தொடங்கினர். பசுவின் பால் (ஒழுகை) சொரிந்து, சிலை வெளிப்பட்டதால், அந்த இடம் ஒழுகை மங்கலம் என்று அழைக்கப்படுகிறது.

கோவில் அமைப்பு

இந்த கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவில் ஆகும். இக்கோவில், நுழைவு வாசலுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. நுழைவு வாசலை கடந்ததும் துவஜ ஸ்தம்பம், பலிபீடம் காணப்படுகிறது. அதை கடந்ததும் கருவறையில் சுயம்புவாக அம்மன் காட்சி அளிக்கிறாள். அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபம் உள்ளது. கோவில் வளாகத்தில் சீதளா பரமேஸ்வரி, விநாயகர், நாகர்கள் சன்னிதிகள் உள்ளன.

கோவிலின் எதிரில் கருப்பண்ண சுவாமி, காத்தவராயன், பேச்சி அம்மன் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். இதன் அருகிலேயே கோவில் தீர்த்தம் உள்ளது. அதன் கரையில் கிழக்கு நோக்கி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. கோவிலின் தென் மேற்கு மூலையில் தல விருட்சமாக வேப்பமரம் உள்ளது.

வழிபாடு

பிரிந்த குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைவதற்கும், தம்பதிகளிடையே ஒற்றுமை பலப்படவும், செழுமையான வாழ்வு மற்றும் எதிர்கால சந்ததியினர் நலனுக்காகவும் பக்தர்கள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். கோவில் குளத்தில் மிளகு, சர்க்கரை, உப்பு சேர்த்து கரைத்து சாப்பிட்டால் உடலில் ஏற்படும் கட்டிகள் போன்றவையும், மனதில் உள்ள கவலைகளும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருமண வரம் வேண்டி வரும் பக்தர்கள், கோவிலின் வேப்ப மரத்தில் மஞ்சள் நூல் கட்டி வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும். இங்கு தொட்டில் கட்டி குழந்தை வரம் வேண்டுவோருக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் பெருந்திரளாக பக்தர்கள் வருகை தந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்தும், சிலர் பொங்கல் வைத்தும் வாழிபாடு செய்கிறார்கள். முடி காணிக்கை செலுத்துதல், மண்ணால் ஆன உடல் உறுப்பு பொம்மைகளை செய்து அம்மனுக்கு வேண்டுதலாக நிறைவேற்றுகின்றனர்.

திருவிழாக்கள்

சித்திரை தமிழ் புத்தாண்டு தினம், பங்குனி பெருந்திருவிழா, புரட்டாசி நவராத்திரி மற்றும் தைப் பொங்கல் ஆகியவை இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. ஆடிப் பெருக்கு நாளில் தீர்த்தவாரி, மகிமலை ஆற்றின் கரையில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாக்களில் உள்ளூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெறுகின்றனர்.

கோவில் தினமும் காலை 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்துக்காக நடை திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

சீர்காழி மற்றும் மயிலாடுதுறையில் இருந்து காரைக்கால் செல்லும் வழியில், திருக்கடையூரில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஒழுகை மங்கலம் கிராமம். ஒழுகை மங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தெற்கு திசையில் சுமார் 250 மீட்டர் தொலைவில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.

Read Entire Article