ஒழுகூர்குப்பம் அக்னி வசந்த விழாவில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

2 weeks ago 4

*திரளான பக்தர்கள் பங்கேற்பு

வாலாஜா : வாலாஜா அடுத்த ஒழுகூர குப்பம் கிராமத்தில் பழமையான திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அக்னி வசந்த விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. அதன்படி, 47ம் ஆண்டு அக்னி வசந்த விழா கடந்த மாதம் மஹாபாரத கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, 18 நாட்கள் மஹாபாரத சொற்பொழிவு, இசை பாடல் மற்றும் கட்டைக்கூத்து ஆகியன நடந்து வந்தது.

விழாவில் நேற்று காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி களி மண்ணால் மிக பிரமாண்டமாக துரியோதனன் உருவச்சிலை அமைக்கப்பட்டிருந்தது. பீமன் வேடம் பூண்ட தெருக்கூத்து கலைஞர், துரியாதனன் தொடையை பிளக்கும் நிகழ்வை தத்ரூபமாக நடித்து காட்டினார். அப்போது, அங்கிருந்த பெண்கள் துரியோதனின் தொடை பகுதியில் குங்குமத்தை கொட்டி ஒப்பாரி வைத்து அழுதனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர், மாலை தீமிதி திருவிழா நடந்தது. அப்போது, கோயில் பூஜாரி அலங்கரிக்கப்பட்ட திரவுபதி அம்மன் உருவச்சிலையை பல்லக்கில் வைத்து அக்னியில் இறங்கி நடந்து வந்தார். பின்னர், திரளான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். முன்னதாக பானையின் மீது கத்தியை நிற்க வைத்து பிரார்த்தனை நடந்தது. விழாவில் இன்று தர்மர் பட்டாபிஷேகம் நடக்க உள்ளது.

The post ஒழுகூர்குப்பம் அக்னி வசந்த விழாவில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article