ஒரேநாளில் 39 பேர் காயம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி: நகராட்சி, கால்நடைத்துறை தீவிரம்

2 weeks ago 1

ராஜபாளையம், ஜன.23: ராஜபாளையத்தில் ஒரே நாளில் 39 பேரை தெருநாய்கள் கடித்துக் குதறியதால், கால்நடைத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் இணைந்து தெருக்களில் சுற்றி திரியும் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளது. தமிழகத்தில் ராஜபாளையம் நாய்கள் உலக அளவில் பல்வேறு சிறப்பு பெற்றது. மேலும் பல பகுதிகளில் பண்ணை வைத்து ராஜபாளையம் இனநாய்கள், சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி போன்ற நாய்களை பராமரித்து இனப்பெருக்கம் செய்ய வைத்து அழிந்து விடாமல் காப்பாற்றி வருகின்றனர். தற்பொழுது இந்திய ராணுவத்தில் ராஜபாளையம் இன நாய் மற்றும் கோம்பை இன நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தெரு நாய்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து கட்டுக்கடங்காமல் இருந்து வருகிறது.

இதனை கட்டுப்படுத்த கோரி நகர்மன்ற கூட்டத்தில் 42 வார்டு கவுன்சிலர்களும் ஒருமித்த குரலில் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று ராஜபாளையம் ஜவகர் மைதான பேருந்து நிறுத்தம் மற்றும் சொக்கர் கோவில் அருகே உள்ள பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் பஸ் ஏற காத்திருந்த பயணிகள் 39 பேரை தெரு நாய் கடித்துக் குதறி உள்ளது.நாய் கடிக்கு ஆளான பயணிகள் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து தகவல் அறிந்து ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்ற நகராட்சி அதிகாரிகள் நாய் கடித்தது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்த நகராட்சி அதிகாரிகள் தெரு நாய்கள் அதிக அளவில் இருப்பதை உறுதி செய்தனர். மேலும் சுகாதார அலுவலர் மருத்துவர் பரிதா வாணி, துப்புரவு அலுவலர் சக்திவேல், சுகாதார ஆய்வாளர் பழனி குரு, தர்மராஜ்,

ராஜபாளையம் கால்நடை மருத்துவமனை உதவி இயக்குனர் ராஜராஜேஸ்வரி, விலங்கு நல ஆர்வலர் ஷ்யாம் குழுவினர் சுமார் 50க்கும் மேற்பட்ட தெரு நாய்களை பிடித்து ரேபிஸ் தடுப்பூசி செலுத்தினர். நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான அடையாளம் இடப்பட்டது. இது குறித்து நகராட்சி மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகள் கூறுகையில், இதுபோன்று தெருக்களில் சுற்றி தெரியும் நாய்களை கண்டால் உடனடியாக வார்டு கவுன்சிலர்கள் மூலமாகவும் அல்லது நேரடியாகவும் ராஜபாளையம் நகராட்சிக்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும் வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கு ராஜபாளையம் அரசு கால்நடை மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post ஒரேநாளில் 39 பேர் காயம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி: நகராட்சி, கால்நடைத்துறை தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article