*வேலூர் அருகே பரிதாபம்
வேலூர் : வேலூர் அருகே கன்டெய்னர் லாரியில் சிக்கி 2 வாலிபர்கள் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர்.வேலூர் அடுத்த பள்ளிகொண்டாவை சேர்ந்தவர் ஹரிஹரன்(20), இறைவன்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஜீவா(22), தெள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் சூரியா(20). இவர்கள் மூன்று பேரும் ஐடிஐ முடித்து விட்டு ராணிப்பேட்டை சிப்காட் பெல் நிறுவனத்தில் அப்ரண்டீஸாக பயிற்சி பெற்று வருகின்றனர்.
நண்பர்களான இவர்கள் 3 பேரும் நேற்று காலை வழக்கம்போல் ஒரே பைக்கில் ராணிப்பேட்டை பெல் நிறுவனம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். பைக்கை ஜீவா ஓட்டிச் சென்றார். காலை 7.30 மணியளவில் வேலூர் அடுத்த அலமேலுமங்காபுரம் மேம்பாலம் தாண்டி சென்ற போது, அங்கு தேசிய நெடுஞ்சாலையில் தார் தளம் அமைக்கும் பணிக்காக வைக்கப்பட்டிருந்த கூம்பு வடிவ சாலை தடுப்பு மீது இவர்களது பைக் எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் நிலைதடுமாறிய 3 பேரும் பைக்குடன் கன்டெய்னர் லாரியில் மோதி கீழே விழுந்தனர். இதில் ஜீவாவும், ஹரிஹரனும் லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். சூரியா படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
சம்பவம் நடந்த இடத்தில் ஒருபக்கம் நடந்து வரும் சாலைப்பணியால் மறுபக்கம் இந்த விபத்தால் பள்ளி, கல்லூரி செல்லும் வாகனங்கள், தொழிற்நிறுவனங்களின் வாகனங்கள், பயணிகள் பஸ்கள், லாரிகள், வேன்கள் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்ல முடியாமல் தேசிய நெடுஞ்சாலையில் இருதிசையிலும் 2 கி.மீ தொலைவுக்கு அணிவகுத்தன.
சடலங்களை போலீசார் அப்புறப்படுத்தியதுடன், படுகாயமடைந்தவரை மீட்டு ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து போக்குவரத்தை போலீசார் மெல்ல மெல்ல ஒழுங்குப்படுத்தினர். இதனால் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆமை வேக பணிகளால் பலியாகும் உயிர்கள்
வேலூரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அலமேலுமங்காபுரத்தில் மேம்பால பணி சமீபத்தில் நடந்து முடிந்தது. தற்போது தேசிய நெடுஞ்சாலையில் பேட்ச் ஒர்க் நடந்து வருகிறது. அதேபோல் 2 இடங்களில் மேம்பால பணி தொடங்கியுள்ளது. இதுதவிர வேலூர் நகரில் ஆபீசர்ஸ் லைனில் பாதாள சாக்கடை திட்டப்பணி முடிந்து அரசு போக்குவரத்துக்கழக கிருஷ்ணா நகர் பணிமனை தொடங்கி சுற்றுலா மாளிகை வரை பள்ளங்களில் ஜல்லிக்கற்கள் மட்டுமே கொட்டு நிரப்பப்பட்டுள்ளது.
இந்த பணியும் கடந்த 8 மாதங்களுக்கும் மேல் நடந்து வருகிறது. மெதுவாக நடந்து வரும் இப்பணிகளால் அடிக்கடி ஏற்படும் சாலை விபத்துகளில் உயிர்பலிகளும், படுகாயமடையும் சம்பவங்களும் தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே காட்பாடி சாலையில் கழிவுநீர் கால்வாய் பணி தாமதத்தால் அடுத்தடுத்து நடந்த விபத்துகளில் 4 பேர் பலியான சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இத்தனைக்கும் வேலூர் ஆபீசர்ஸ் லைனில் கலெக்டர் பங்களா, டிஐஜி முகாம் அலுவலகம், சுற்றுலா மாளிகை, டிஎஸ்பி முகாம் அலுவலகம், அரசு போக்குவரத்து பணிமனை என உள்ளது. தினமும் இந்த வழியாக கலெக்டர் முதல் எஸ்பி, டிஐஜி வரை பயணிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, போக்குவரத்து முக்கியத்துவம் மிக்க சாலைகளில் நடந்து வரும் அடிப்படை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.
The post ஒரே பைக்கில் சென்ற 3 பேர் சாலை தடுப்பில் மோதி கன்டெய்னர் லாரியில் சிக்கிய 2 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.