புதுடெல்லி: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சாத்தியமா? என்பதை ஆராய்ந்து வரும் நாடாளுமன்றக் கூட்டுக் குழு முன் சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதிகள் இருவர் இன்று ஆஜராகினர். நாடு முழுவதும் நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை ஒன்றிய அரசு முன்மொழிந்துள்ளது. இந்தத் திட்டத்தின் சாத்தியக்கூறுகள், சாதக பாதகங்கள் மற்றும் அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்கள் குறித்து ஆராய்வதற்காக, பாஜக எம்பி பி.பி.சவுத்ரி தலைமையில் நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, தனது ஆய்வின் ஒரு பகுதியாக, மகாராஷ்டிரா உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அம்மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்தது. பெரும்பாலானோர் இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததாகவும், சில அரசியல் கட்சிகள் மட்டும் தேசிய மற்றும் மாநிலப் பிரச்னைகள் ஒன்றாகக் கலக்கப்படும் என்ற கவலையை வெளிப்படுத்தியதாகவும் குழுவின் தலைவர் பி.பி.சவுத்ரி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இத்திட்டம் குறித்த ஆலோசனையின் முக்கிய கட்டமாக, நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் கூட்டம் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகளான டி.ஒய்.சந்திரசூட் மற்றும் ஜகதீஷ் சிங் கேஹர் ஆகியோர் கலந்துகொண்டனர். அரசியலமைப்பு (129வது திருத்தம்) மசோதா – 2024 மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்) மசோதா – 2024 ஆகியவை குறித்து ஆராயும் இந்தக் குழுவின் முன், அவர்கள் இருவரும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் தொடர்பான தங்களது சட்டரீதியான மற்றும் அரசியலமைப்பு சார்ந்த கருத்துக்களை விரிவான விளக்கம் அளித்தனர். இத்திட்டம் இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பிற்குள் பொருந்துகிறதா? என்பதைப் புரிந்துகொள்ள முன்னாள் தலைமை நீதிபதிகளின் வழிகாட்டுதல் மிகவும் உதவியாக அமையும் என குழுவின் தலைவர் பி.பி.சவுத்ரி நம்பிக்கை தெரிவித்தார்.
The post ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சாத்தியமா? நாடாளுமன்றக் குழு முன் சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதிகள் ஆஜர் appeared first on Dinakaran.