ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா-தம்பி உயிரிழப்பு… பள்ளி வேன் மீது ரயில் மோதிய பயங்கர விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

4 hours ago 1

கடலூர்: கடலூர் – செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை (கேட் எண் 170) இன்று காலை மாணவர்களுடன் பள்ளி வாகனம் கடக்க முயன்ற போது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி பயணித்த பயணிகள் ரயில் (வண்டி எண் 56813) மோதியது. இந்த விபத்தில் ரயில் மோதியதில் பள்ளி வாகனம் சில மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது. சத்தம் கேட்டு அந்த பகுதியில் உள்ள மக்கள் பதட்டத்துடன் சம்பவ இடத்துக்கு ஓடி வந்தனர். வேன் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கி இருந்த மாணவர்களை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். அப்போதுதான் தண்டவாளத்தில் ஒரு மாணவரின் உடல் சிதறி கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடல் சிதறி பலியான அந்த மாணவரின் பெயர் நிவாஸ். இவன் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

வேனுக்குள் சிக்கி இருந்த மாணவர்களை மீட்டபோது சாருமதி என்ற மாணவி உடல் நசுங்கி பலியாகி இருப்பது தெரிந்தது. இவர் 11-ம் வகுப்பு படித்து வந்தார். உடனடியாக மாணவன் நிவாஸ் உடலும், மாணவி சாருமதி உடலும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. செழியன் (வயது15), விஸ்வேஸ் (16) என்ற 2 மாணவர்களும் படுகாயங்களுடன் வேனுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அவர்கள் 2 பேரும் மீட்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் செழியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இந்த கோர விபத்தில் உயிரிழந்த சாருமதியும் செழியனும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தம்பி என்பது மிகவும் சோகமாகும். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திராவிட மணி என்பவரின் மகள் சாருமதி, மகன் செழியன் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா-தம்பி உயிரிழப்பு… பள்ளி வேன் மீது ரயில் மோதிய பயங்கர விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Read Entire Article