ஒரே எண் கொண்ட வாக்காளர் அட்டை மோசடி பிரச்சினை முடிந்தது - தேர்தல் கமிஷன் தகவல்

5 hours ago 3

புதுடெல்லி,

ஒரே வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் கூடிய வாக்காளர் அட்டைகள், ஒன்றுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சர்ச்சை எழுப்பியது. அப்படி ஒரே எண் கொண்ட வாக்காளர் அட்டைகளை பயன்படுத்தி, கள்ள ஓட்டுகள் போடப்படும் என்று அச்சம் தெரிவித்தது. ஆனால், அந்த குற்றச்சாட்டுகளை தேர்தல் கமிஷன் மறுத்தது. இப்பிரச்சினைக்கு 3 மாத காலத்தில் தீர்வு காணப்படும் என்று கூறியது.

அதன்படி, இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு விட்டதாக தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. இதுகுறித்து தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் கூறியதாவது:-

நீண்ட காலமாக உள்ள வாக்காளர் அட்டை மோசடி பிரச்சினைக்கு தீர்வு காண மொத்தம் 99 கோடிக்கு மேற்பட்ட வாக்காளர்களின் தகவல் தொகுப்புகளை 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் அலசி ஆராய்ந்தனர். 4 ஆயிரத்து 123 சட்டசபை தொகுதிகளின் வாக்காளர் பதிவு அதிகாரிகளும் இதில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஒரே எண் கொண்ட வாக்காளர் அடையாள அட்டை, மிகவும் குறைவானவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 4 வாக்குச்சாவடிகளுக்கு சராசரியாக ஒருவருக்கு மட்டுமே அப்படி வழங்கப்பட்டு இருந்தது. கள சரிபார்ப்பின்போது, அவர்கள் உண்மையான வாக்காளர்கள் என்றும், வெவ்வேறு சட்டசபை தொகுதி மற்றும் வெவ்வேறு வாக்குச்சாவடிகளை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. அத்தகைய வாக்காளர்களுக்கு புதிய எண்களுடன் புதிய வாக்காளர் அட்டை வழங்கப்பட்டது. இதன்மூலம் இப்பிரச்சினை முடிவுக்கு வந்தது. இவ்வாறு தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.

Read Entire Article