
சென்னை,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் கோபால சுந்தரராஜ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரசு பணியை எதிர்நோக்கி இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக, டி.என்.பி.எஸ்.சி. மூலம் 17 ஆயிரத்து 595 காலிப்பணியிடங்கள் 2026 ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டமன்றத்தில் அறிவித்தது.
தேர்வர்களின் நலன் கருதி, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு பணிகளை துரிதப்படுத்தி, கடந்த 2024 ஜூன் முதல் நடப்பாண்டு ஜூன் மாதம் வரையில் பல்வேறு அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப 17 ஆயிரத்து 702 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதாவது, 2026 ஜனவரி மாதம் வரை நிர்ணயித்த இலக்கை டி.என்.பி.எஸ்.சி. 7 மாதங்களுக்கு முன்பாகவே எட்டியுள்ளது. மேலும், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு கூடுதலாக 2 ஆயிரத்து 500-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.