ஒருநாள் கிரிக்கெட்: முதல் 50 போட்டிகளில் அதிக ரன்கள்... உலக சாதனை படைத்த சுப்மன் கில்

4 hours ago 2

அகமதாபாத்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை ஆரம்பத்திலேயே கைப்பற்றி விட்டது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 356 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சுப்மன் கில் 112 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் இமாலய இலக்கை நோக்கி களம் கண்ட இங்கிலாந்து அணி 34.2 ஓவர்களில் 214 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியா 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் டாம் பாண்டன் மற்றும் கஸ் அட்கின்சன் தலா 38 ரன்கள் அடித்தனர். இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, அக்ஷர் படேல், ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

சுப்மன் கில் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை தட்டிச் சென்றார். இந்திய நட்சத்திர வீரர் சுப்மன் கில்லுக்கு இது 50-வது ஒருநாள் போட்டியாகும். அவர் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் 2587 ரன்கள் அடித்துள்ளார்.

இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தனது முதல் 50 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னர் தென் ஆப்பிரிக்காவில் ஹாசிம் அம்லா 2486 ரன்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள சுப்மன் கில் புதிய சாதனை படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:

1. சுப்மன் கில் - 2587 ரன்கள்

2. ஹாசிம் அம்லா - 2486 ரன்கள்

3. இமாம் உல் ஹக் - 2386 ரன்கள்

4.பகார் ஜமான் - 2262 ரன்கள்

5. ஷாய் ஹோப் - 2247 ரன்கள்

Read Entire Article