![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/13/39293114-chennai-12.webp)
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை உயர் அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், கடந்த ஆண்டுகளில் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் செயலாக்கத்தைப் பற்றியும் வரும் ஆண்டிற்கான அறிவிப்புகள் பற்றியும் கேட்டறிந்தார். நெல் கொள்முதல், நெல் இருப்பு மற்றும் நகர்வு பற்றி ஆய்வு செய்தார்.
நெல் கொள்முதலில் தற்போதுள்ள நடைமுறைப்படி நாளொன்றுக்கு ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் கொள்முதல் செய்யப்படும் உச்சவரம்பினை 32 டன்னிலிருந்து (800 மூட்டைகள்) 40 டன்னாக (1,000 மூட்டைகள்) உயர்த்திக் கொள்முதல் செய்ய அறிவுறுத்தினார். நெல் விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு ஏக்கருக்குத் தற்போது நிர்ணயித்துள்ள 2,400 கிலோ (60 மூட்டைகள்) நெல்லினை 2,800 கிலோவாக (70 மூட்டைகள்) உயர்த்திடவும் அறிவுறுத்தினார். நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகமான நெல் வரத்து இருந்தால், இரண்டு இயந்திரங்கள் வைத்து நெல் கொள்முதல் செய்திடவும் அறிவுறுத்தினார்.
பொது விநியோகத்திட்ட அங்காடிகளில் பொதுமக்களுக்கு கனிவான முறையில் சேவை செய்திடவும் அனைத்துப் பொருட்களையும் தரத்துடன் ஒரே நேரத்தில் வழங்கிடவும் கடைகளுக்கு வரும் பொருட்களின் எடை சரியாகவும் வழங்கப்படும் பொருட்களின் எடை சரியாக இருப்பதையும் ஆய்வு அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். மாநில எல்லையோரங்களில் அரிசிக் கடத்தலைத் தடுத்திட கண்காணிப்பு பணியைத் தீவிரப்படுத்திடவும், டீசல் கலப்பினை நிறுத்திடவும் குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறையின் காவல்துறை அலுவலர்களைக் கேட்டுக் கொண்டார்.
தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் பயன்பாட்டினை அதிகப்படுத்தி விவசாயிகளுக்கும் வணிகர்களுக்கும் அதிக அளவில் சேவை செய்து வருமானத்தை அதிகப்படுத்திடவும் அறிவுரை வழங்கினார். கூட்டத்தில், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மைச் செயலாளர் சத்யபிரத சாகு, தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன நிர்வாக இயக்குநர் சு.பழனிசாமி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் அ.சண்முகசுந்தரம், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குநர் த.மோகன், கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் சா.ப.அம்ரித், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறைத் தலைவர் ரூபேஷ் குமார் மீனா மற்றும் துறையின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.