![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/13/39293115-pakfine.webp)
கராச்சி,
சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராகும் பொருட்டு பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் முதல் அணியாக நியூசிலாந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டது.
இதனையடுத்து கராச்சியில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. லீக் சுற்றில் எந்த வெற்றியும் பெறாத தென் ஆப்பிரிக்கா வெளியேறியது. நாளை நடக்கும் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
முன்னதாக நேற்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக பாகிஸ்தான் வீரர்களான ஷாகீன் அப்ரிடி, கம்ரான் குலாம், சாத் ஷகீல் ஆகியோருக்கு ஐ.சி.சி. அபராதம் விதித்துள்ளது.
அதன்படி மேத்யூ பிரீட்ஸ்கே உடனான மோதலுக்காக வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அப்ரிடிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதமும், தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா ரன் அவுட் ஆகி வெளியேறியபோது அதனை ஆக்ரோஷமாக கொண்டாடியதற்காக கம்ரான் குலாம், சாத் ஷகீல் ஆகியோருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து தலா 10 சதவீதமும் ஐசிசி அபராதம் விதித்துள்ளது. மேலும் அவர்களுக்கு தலா ஒரு தகுதி இழப்பு புள்ளியும் வழங்கி ஐ.சி.சி. தண்டனை வழங்கியுள்ளது.