சென்னை,
"நானும் ரவுடிதான், எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், ரன் பேபி ரன், புகழ்" போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. நயன்தாரா நடிப்பில் வெளிவந்த 'மூக்குத்தி அம்மன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். நடிப்பு, இயக்கம் என தொடர்ந்து இயங்கி வரும் ஆர்.ஜே. பாலாஜி சூர்யாவின் 45-வது படத்தை இயக்க உள்ளார்.
இந்தநிலையில் தற்போது பா. ரஞ்சித்தின் உதவி இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் 'சொர்க்கவாசல்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் படத்தின் டிரெய்லர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மத்திய சிறைச்சாலையை மையமாக வைத்து 1999-ல் நடக்கும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. இதில், செல்வராகவன், கருணாஸ், பாலாஜி சக்திவேல், எழுத்தாளர் சோஷா சக்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 29-ந் தேதி வெளியாக உள்ளது.
சமீபத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்.ஜே பாலாஜி சில சுவாரசிய தகவல்களை கூறியுள்ளார். அதில் "விஜய் டிவியில் திட்டம் போட்டு ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் சிவகார்த்திகேயன் மாதிரி வந்துவிடலாம் என்று நினைக்கின்றனர். ஆனால் அப்படியெல்லாம் யாராலும் வரமுடியாது. சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் மிக சிறப்பான வேலை மற்றும் திறமையை வெளிப்படுத்தினார். மக்கள் அனைவருக்கும் பிடித்தது . இதனால் மட்டுமே விஜய் டிவியில் இருந்து சிவகார்த்திகேயன் இந்த நிலைமைக்கு வந்துள்ளார். விஜய் டிவிக்குள் சென்றாலே சிவகார்த்திகேயனை போல் ஆகிவிட முடியாது " என்று கூறியுள்ளார்.