இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

3 hours ago 1

லண்டன்,

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கு மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி, இங்கிலாந்தில் அந்நாட்டு உள்துறை மந்திரி வெட் கூப்பரை அவர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், ஆள் கடத்தல் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றை எதிர்கொள்ள இணைந்து மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளை பற்றி இருவரும் பேசினர்.

இதேபோன்று தொழில் மற்றும் வர்த்தக துறைக்கான மந்திரி ஜோனாதன் ரெனால்ட்ஸ் உடனும் ஜெய்சங்கரின் சந்திப்பு நடந்தது. இந்நிலையில், இங்கிலாந்து வெளியுறவு மந்திரி டேவிட் லேமியை மத்திய மந்திரி ஜெய்சங்கர் நேரில் சந்தித்து பேசினார்.

அதற்கு முன் பிரதமர் கீர் ஸ்டார்மரையும் அவர் சந்தித்து பேசினார். இதுபற்றி எக்ஸ் சமூக ஊடக பதிவில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் இன்று அதிகாலை பகிர்ந்து கொண்ட செய்தியில், இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மரை டவுனிங் தெருவில் உள்ள அவருடைய அரசு பங்களாவில் சந்தித்ததில் மகிழ்ச்சி. அப்போது, பிரதமர் மோடியின் சிறந்த வாழ்த்துகளை அவரிடம் தெரிவித்து கொண்டேன்.

இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கு இடையே இருதரப்பு, பொருளாதார ஒப்பந்தம் மற்றும் மக்கள் ஒருவருடன் ஒருவர் பரிமாற்றங்களை மேம்படுத்துவது ஆகியவற்றை முன்னெடுத்து செல்வது பற்றி விவாதிக்கப்பட்டது என அவர் தெரிவித்து உள்ளார்.

இந்த சந்திப்பில், உக்ரைன் போரில் இங்கிலாந்தின் அணுகுமுறையை பற்றி ஸ்டார்மர், ஜெய்சங்கரிடம் பகிர்ந்து கொண்டார். இந்த பயணம் முடிந்ததும், நாளை அயர்லாந்து நாட்டுக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

Read Entire Article