மதுரை: “ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் விழாக்களை நடத்த வேண்டுமா? மற்றவர்கள் வேடிக்கை பார்க்க வேண்டுமா? இது ஜனநாயக நாடு. அனைவருக்கும் சாமி கும்பிட உரிமை உண்டு” என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. கரூர் ஸ்ரீ ஆரவாயி அம்மன் கோயில் திருவிழாவில், பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதிக்கு மட்டும் தேர் செல்லாமல் புறக்கணிப்பதாக தொடரப்பட்ட வழக்கில் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கோயில் திருவிழாவில் புறக்கணிக்கப்பட்ட பட்டியலின மக்களின் பகுதி – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சரமாரிக் கேள்விகள்
கரூர் ஸ்ரீ ஆரவாயி அம்மன் கோயில் திருவிழாவில், பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதிக்கு மட்டும் தேர் செல்லாமல் புறக்கணிப்பதாக ரமேஷ் என்பவரால் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 15 ஆண்டுகளாக எங்கள் பகுதிக்கு தேர் வருவதில்லை என்றும், இந்த ஆண்டு விழாக் குழுவிடம் முறையிட்டும் அவர்கள் மறுத்துவிட்டனர் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
“ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் விழாக்களை நடத்த வேண்டுமா? மற்றவர்கள் வேடிக்கை பார்க்க வேண்டுமா? இது ஜனநாயக நாடு. அனைவருக்கும் சாமி கும்பிடுவதற்கு உரிமை உண்டு” என நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு காட்டமாக தெரிவித்தனர்.
அப்போது எதிர் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என வேண்டுகோள் வைத்தனர்.
அப்போது நீதிபதிகள், “பட்டியலின மக்கள் சாமி கும்பிட ஏன் அனுமதி இல்லை என பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் கேட்கிறீர்கள்? பதில் மனுத் தாக்கல் செய்கிறேன் என்ற பெயரில் இந்த வழக்கை 15 ஆண்டுகள் இழுத்துக் கிடப்பில் போடுவீர்கள். அதுவரை பட்டியலின மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பார்களா?” எனக் கேள்வி எழுப்பினர்.
கரூர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், வருவாய் மண்டல அலுவலர், விழாக் குழு உறுப்பினர்களான சக்திவேல், செந்தில், வேலு ஆகியோர் நாளை நேரில் ஆஜராகி வழக்குத் தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர்.
The post ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் விழாக்களை நடத்த வேண்டுமா? மற்றவர்கள் வேடிக்கை பார்க்க வேண்டுமா?: உயர்நீதிமன்ற கிளை கேள்வி appeared first on Dinakaran.