காலே: இலங்கையுடனான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா ஒரு இன்னிங்ஸ் 242 ரன் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றுள்ளது . இலங்கை சென்றுள்ள ஆஸி கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் டெஸ்ட், கடந்த ஜன. 29ம் தேதி துவங்கியது. முதலில் களமிறங்கிய ஆஸி வீரர்கள் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். 2ம் நாள் ஆட்டத்தின்போது, 6 விக்கெட் இழப்புக்கு 654 ரன் எடுத்து ஆஸி டிக்ளேர் செய்தது. ஆஸியின் உஸ்மான் கவாஜா 232, டிராவிஸ் ஹெட் 57, ஸ்டீவன் ஸ்மித் 141, ஜோஷ் இங்லிஸ் 102 ரன் குவித்தனர். இதையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி வீரர்கள், ஆஸியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மளமளவென சரிந்தனர்.
52.2 ஓவரில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை 165 ரன் மட்டுமே எடுத்தது. இதனால், பாலோ ஆன் பெற நேரிட்டது. மீண்டும் 2வது இன்னிங்சை தொடர்ந்த இலங்கை வீரர்கள் மறுபடியும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஏஞ்சலோ மாத்யூஸ் 51, கமிந்து மெண்டிஸ் 32, தனஞ்ஜெய டி சில்வா 39 ஆகியோர் மட்டுமே சற்று தாக்குப்பிடித்தனர். 4வது நாளில் 54.3 ஓவர்களில் 247 ரன்னுக்கு இலங்கை மீண்டும் ஆல் அவுட்டானது. ஆஸியின் மேத்யூ குனெமான், நாதன் லியான் தலா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினர். இதனால், ஒரு இன்னிங்ஸ் 242 ரன் வித்தியாசத்தில் ஆஸி அணி மெகா வெற்றி பெற்று சாதனை படைத்தது. ஆட்ட நாயகனாக ஆஸி அதிரடி வீரர் உஸ்மான் கவாஜா அறிவிக்கப்பட்டார். இந்த அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 6ம் தேதி துவங்குகிறது.
The post ஒரு இன்னிங்ஸ் 242 ரன் மெகா தோல்வி சொந்த மண்… இருந்தும் வீண்! ஆஸியிடம் இலங்கை சரண்: 4 நாளில் முடிந்த முதல் டெஸ்ட் appeared first on Dinakaran.