ஒரு இடத்திலாவது வன்முறை ஏற்பட்டுள்ளதா? - 'எம்புரான்' படத்திற்கு தடை விதிக்க கோர்ட்டு மறுப்பு

3 days ago 4

திருவனந்தபுரம்,

மோகன்லால் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'லூசிபர்' படத்தின் 2-ம் பாகமாக உருவான 'எல் 2 எம்புரான்' கடந்த 27-ம் தேதி வெளியானது. மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிவேகமாக ரூ. 100 கோடி வசூல் செய்த மலையாள படம் என்ற புதிய சாதனையை 'எல் 2 எம்புரான்' படைத்திருக்கிறது.

இதுவரை ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இந்த படத்தில் ஒரு சில சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்ட நிலையில் படக்குழு அதற்காக 17 இடங்களில் காட்சிகள் நீக்கி மொத்தமாக 3 நிமிட காட்சிகளை படத்தில் இருந்து எடுத்தனர். நடிகர் மோகன்லாலும் இதற்கு வருத்தம் தெரிவித்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டிருந்தார்.

இந்த சூழலில் 'எல் 2 எம்புரான்' படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி கேரள ஐகோர்ட்டில் பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இதன்படி, "இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் 2002 குஜராத் கலவரத்தை நினைவுபடுத்தும் விதமாக இருப்பதாகவும், வகுப்புவாத வன்முறையைத் தூண்டும் அபாயத்தைக் கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும், இதில் முல்லை பெரியாறு அணை பாதுகாப்பற்றதாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டி இருந்தார்.

இந்நிலையில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள 'எம்புரான்' திரைப்படத்திற்கு தடை விதிக்க கேரள ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது பா.ஜ.க. நிர்வாகியிடம் நீதிபதி, "கிட்டத்தட்ட ஒரு வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தால் தூண்டப்பட்ட ஏதேனும் வன்முறை சம்பவத்தை சுட்டிக்காட்ட முடியுமா..? என கேள்வி எழுப்பினார்.

இதனைத்தொடர்ந்து இந்த திரைப்படம் எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தியதற்கான எந்த வழக்கும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை என்று அரசு வழக்கறிஞர் கோர்ட்டில் தெரிவித்தார்.

இதனையடுத்து, நீங்கள் எம்புரான் பார்த்துவிட்டீர்களா..? உங்கள் ஆட்சேபனை என்ன..? என பா.ஜ.க. நிர்வாகியிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி, இது விளம்பரத்திற்காக போடப்பட்டுள்ள மனு என கண்டித்ததுடன், கோடை விடுமுறைக்குப் பின் வழக்கு விசாரிக்கப்படும் என்றும் அறிவித்தார். 

Read Entire Article