மும்பை: ‘ஒய்+’ பாதுகாப்பு இருக்கும் நிலையில் சல்மான் கானின் வீட்டில் அத்துமீறி நுழைந்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அதிகாலை 3 மணியளவில் இளம் பெண் ஒருவர் சல்மான்கானின் வீட்டு வாசல் வரை சென்று கதவை தட்டியதாக கூறப்படுகிறது. அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, பெண் ஒருவர் அதிகாலை நேரத்தில் வீட்டின் கதவை தட்டுவது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த சல்மான் கானின் பணியாளர்கள் அந்தப் பெண்ணை பிடித்து விசாரித்தபோது, அந்தப் பெண் தான் யாரையும் அழைக்கவில்லை என்று கூறினார். உடனடியாக பாதுகாவலர்கள் அந்தப் பெண்ணை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்தப் பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில், அந்தப் பெண் கார் பகுதியைச் சேர்ந்த இஷா சாப்ரா (36) என்றும், மாடல் மற்றும் நடிகையாக வேண்டும் என்று ஆசைப்படுபவர் என்றும், சினிமாவில் வாய்ப்பு கேட்டு சல்மான் கானின் வீட்டிற்கு வந்ததும் தெரியவந்துள்ளது.
இருந்தும் இவ்விவகாரம் தொடர்பாக பாந்த்ரா போலீசார் வழக்குபதிந்து, அந்தப் பெண்ணை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம், சல்மான் கானின் பாதுகாப்பு குறித்த கவலைகளை மேலும் அதிகரித்துள்ளது. ஏனெனில் அவர் ஏற்கனவே பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடமிருந்து பல கொலை மிரட்டல்களைப் பெற்றுள்ளார். இதற்கு முன்பு, கடந்த ஏப்ரல் 2024ல், அவரது வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடந்தது. இதனால் அவருக்கு ‘ஒய்+’ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பெண்ணின் அத்துமீறல் முயற்சிக்கு முந்தைய நாள், அதாவது 20ம் தேதி ஜிதேந்திர குமார் சிங் என்ற 23 வயது இளைஞரும், சல்மான் கானை சந்திக்க விரும்பி வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்று கைது செய்யப்பட்டார். இந்த இரண்டு சம்பவங்களையும் பாந்த்ரா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post ‘ஒய்+’ பாதுகாப்பு இருக்கும் நிலையில் சல்மான் கானின் வீட்டில் அத்துமீறி நுழைந்த பெண் கைது: நடிகரின் வீட்டு கதவை தட்டியதால் பரபரப்பு appeared first on Dinakaran.