மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு பயிர் காப்பீட்டுத் தொகை கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 4 லட்சத்திற்கு மேலானவை மோசடியானவை என்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பயிர் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் பிரதமர் பிரதான் மந்த்ரி பாசல் பீமா யோஜனா என்ற காப்பீடு திட்டத்தை ஒன்றிய வேளாண் அமைச்சகம் 2016 ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தி வருகிறது. உலகின் மிக பெரிய காப்பீடு திட்டமாக கருதப்படும் இதன் கீழ் ஆண்டு தோறும் 5 கோடிக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
இது பயிர்காப்பீட்டு திட்டத்தின் கீழ் நிலத்தின் பரப்பு மற்றும் சாகுபடி செய்யப்பட்ட பயிரை பொறுத்து பாதிப்புக்கு ஏற்ப இழப்பீடு வழங்கப்படுகிறது. இதன்படி சோயா பயிரிட்டவர்களுக்கு இழப்பு ஏற்பட்டால் ஹெக்டேருக்கு 20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும் பச்சை பயிறு பயிரிட்டவர்களுக்கு ரூ.90 ஆயிரம் வரையும் இழப்பீடு தரப்படுகிறது. இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு மகாராஷ்டிராவில் இழப்பீடு கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 4 லட்சத்து 14 ஆயிரம் விண்ணப்பங்கள் மோசடியானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. பயிரிடப்படாத நிலம் மற்றவர்களின் நிலம் ஆகியவற்றில் இழப்பு ஏற்பட்டதாக குறிப்பிட்டு பலர் விண்ணப்பங்களை அளித்துள்ளனர்.
நிலத்திற்கு சொந்தக்காரரான விவசாயிக்கு தெரியாமலும் பல விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன. மாநிலத்திற்கு வெளியே இருந்து சிலர் இழப்பீடு கோரி விண்ணப்பித்துள்ளதாகவும் வீட்டு மனைகள், அரசு நிலங்கள், வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றை குறிப்பிட்டும் பலர் இழப்பீடு கோரி விண்ணப்பித்திருப்பதாக தெரிவித்த வேளாண் அமைச்சர் மனிக்ராவ் கோகாட்டே 4 லட்சத்து 14 ஆயிரம் மோசடியான விண்ணப்பங்களை நிராகரித்து அரசு நிதி வீணாகாமல் காப்பாற்றி உள்ளதாக தெரிவித்துள்ளார். பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இழப்பீடு கோரி மோசடியான விண்ணப்பங்களை அளித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாராஷ்டிர வேளாண்துறை தெரிவித்துள்ளது.
The post ஒன்றிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு அளிக்கப்பட்ட 4 லட்சம் விண்ணப்பங்கள் மோசடியானவை: வேளாண் அமைச்சர் மனிக்ராவ் கோகாட்டே பகிரங்க அறிவிப்பு appeared first on Dinakaran.