“கோமியத்தைக் குடியுங்கள் எனப் பழமைவாதிகள் போதிக்கும் நேரத்தில்..” : மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் பெருமிதம்!

5 hours ago 1

மதுரை : இரும்பின் காலத்தைப் பாருங்கள் என்று உலகிற்கு செய்யப்பட்டுள்ள அறிவிப்பு எமது பெருமையின் மகுடம் என்று சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மதுரை எம்.பி.சு வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொல்லனின் சூடான உலையில் பழுக்க இரும்பைக் காய்ச்சும் போது தண்ணீரைத் தெளித்துக் குளிர வைத்தது போல உனது இனிய சொற்கள் வலி நிறைந்த எனது நெஞ்சிற்கு ஆறுதல் அளித்தன” என்கிறது அகநாநூறு. கோமியத்தைக் குடியுங்கள் எனப் பழமைவாதிகள் போதிக்கும் நேரத்தில் எங்கள் தொழில்நுட்பத்தின் தொன்மையைப் பாருங்கள், இரும்பின் காலத்தைப் பாருங்கள் என்று உலகிற்கு செய்யப்பட்டுள்ள அறிவிப்பு எமது பெருமையின் மகுடம். எமது வரலாற்றின் பெருமைமிகு கண்டுபிடிப்புகளைக் கொண்டாடுவோம்.

இரும்பொன், கரும்பொன், கருந்தாது, இரும்பு, எஃகு, கொல்லன், கருமைக்கொல்லன், உலை, உலைக்கூடம், உலைக்கல், துருத்தி, மிதியுலை என்பன போன்ற இரும்பு எஃகுத் தொழில்நுட்பம் தொடர்பான பல பதிவுகள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன.இவையெல்லாம் கற்பனையில் முகிழ்த்தவை அல்ல. சங்க காலத்திற்கும் முன்பே தமிழ்நிலத்தில் புழக்கத்திலிருந்த தொழில்நுட்பத்திற்கான இலக்கியத்தின் பதிவுகள் என்பது அறிவியல் அடிப்படையில் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது என்கிறது. இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களால் வெளியிடப்பட்ட ‘இரும்பின் தொன்மை’ குறித்த அறிவிப்பு.

5300 ஆண்டுகளுக்கே முன்பே தமிழ்நாட்டில் சிறந்து விளங்கிய தொழில்நுட்பம் ஐயத்திற்கு இடமின்றி அறிவியல் வழியில் மெய்ப்பிக்கப்பட்டிருப்பது பெரு மகிழ்வு.இரும்பு புன்னை மரத்தின் கரிய கிளைகளுக்கும்; நீலம் மரத்தின் பசுமையான இலைகளுக்கும்; வெள்ளி மரத்தின் இலைகளின் நடுப்பகுதியில் காணப்படும் நரம்புகளுக்கும் ஒப்பிடும் அதிநுண்ணறிவு இயற்கையைக் கூர்ந்து நோக்கி வளர்த்தெடுக்கப்பட்ட பேரறிவின் அடையாளம்.இயற்கையைப் பகுத்தறிவைக் கொண்டு அணுகி வளங்களையும் வாழ்வையும் மேம்படுத்திய பயணமே எமது மரபின் பெருமை,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post “கோமியத்தைக் குடியுங்கள் எனப் பழமைவாதிகள் போதிக்கும் நேரத்தில்..” : மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் பெருமிதம்! appeared first on Dinakaran.

Read Entire Article