புதுடெல்லி: ஒன்றிய அரசு பட்ஜெட்டில் வெளியிட்ட அறிவிப்பில், 2024-25 திருத்திய பட்ஜெட் மதிப்பீட்டின்படி அரசின் கடன் ரூ. 181,74,284 கோடி கடன் உள்ளது. 2026 மார்ச் மாதத்தில் இந்த கடன் ரூ. 196,78,772 கோடியாக இருக்கும். இதன்படி ஒவ்வொரு இந்தியரின் தலையிலும் ரூ. 1.4 லட்சம் கடன் சுமை உள்ளது. அதாவது, பிறக்கும் குழந்தைகள் கூட கடன் சுமையுடன்தான் பிறக்கின்றன. காங்கிரஸ் ஆட்சியில் 2014 மார்ச் 31ம் தேதிப்படி ஒன்றிய அரசின் கடன் ரூ. 55.87 லட்சம் கோடியாகத்தான் இருந்தது. ஆனால், பாஜ ஆட்சியில் இந்த கடன் சுமை ரூ. 140.91 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.
* நகர்ப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 1 லட்சம் கோடி
புதுடெல்லி: நகர்ப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ. 1 லட்சம் கோடி நகர்ப்புற சவால் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் தாக்கல் செய்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் , நகர்ப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக நகரங்களை வளர்ச்சி மையங்களாக்கவும், நகரங்களின் ஆக்கப்பூர்வமான மறுசீரமைப்பு மற்றும் தண்ணீர் மற்றும் சுகாதாரம் ஆகிய திட்டங்களை செயல்படுத்துவதற்காக ரூ.1லட்சம் கோடி மதிப்பிலான நகர்ப்புற சவால் நிதி உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த நிதியானது, வங்கி திட்டங்களின் செலவில் 25சதவீதம் வரை நிதியளிக்கும் என்றும், பத்திரங்கள், வங்கி கடன்கள் மற்றும் பொதுமக்கள் -தனியார் பங்களிப்பு மூலமான செலவில் குறைந்தபட்சம் 50 சதவீதம் நிதியளிக்கப்படவேண்டும் என்ற நிபந்தனையுடன் வழங்கப்படும்.
* கிராமப்புற இளைஞர்கள் இடம்பெயர்வதை தடுக்க திட்டம்
2025-26 நிதிநிலை அறிக்கையில், “கிராமப்புறங்களில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தை போக்க, கிராமப்புற இளைஞர்கள் இடம்பெயர்வதை தடுக்கும் விதமாக, கிராம செழிப்பு மற்றும் மீள்தன்மை என்ற திட்டத்தை அரசு செயல்படுத்தும். இது குறிப்பாக கிராமப்புற விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், குறு மற்றும் சிறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற குடும்பங்கள் மீது கவனம் செலுத்தும். கிராமப்புறங்களில் ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* உள்கட்டமைப்பிற்கு ரூ. 1.5 லட்சம் கோடி வட்டியில்லா கடன்
உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மாநிலங்களுக்கு ரூ. 1.5 லட்சம் கோடி 50 ஆண்டுகளுக்கான வட்டியில்லா கடனாக வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தனியாருடன் இணைந்து செயல்படுத்தும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு இந்தியா உள்கட்டமைப்பு திட்ட மேம்பாட்டு நிதியில் இருந்து கடனுதவியை மாநிலங்கள் பெறலாம் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
* பிரதமரின் தன் தன்யா கிருஷி விவசாய உற்பத்தி திறன் உயர்த்த தனி திட்டம்
2025-26ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நேற்று தாக்கல் செய்த ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “விவசாயமே வளர்ச்சியின் முதல் இயந்திரம்” என குறிப்பிட்டார். தொடர்ந்து “நாடு முழுவதும் வேளாண் உற்பத்தியை ஊக்குவிக்க மாநில அரசுகளுடன் இணைந்து பிரதமரின் தன் தன்யா கிருஷி திட்டம் தொடங்கப்படும். இதில் முதல்கட்டமாக மந்தமான அல்லது மிகவும் குறைவான உற்பத்தி திறன் கொண்ட 100 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, தன் தன்யா கிருஷி திட்டம் செயல்படுத்தப்படும். அதன் மூலம் மேம்படுத்தப்பட்ட விவசாய உற்பத்தி திறன், பயிர் பல்வகைபடுத்துதல் மற்றும் அறுவடைக்கு பிந்தைய உள்கட்டமைப்பை மேம்படுத்துவது ஆகியவற்றின் மூலம் 1.7 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது” என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
* அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் புற்றுநோய் சிகிச்சை மையம்
நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் அடுத்த 3 ஆண்டுகளில் புற்றுநோய் மையங்கள் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பட்ஜெட்டில், நாடு முழுவதும் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் அடுத்த 3 ஆண்டுகளில் பகல்நேர பராமரிப்பு புற்றுநோய் மையம் அமைக்கப்படும் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும் இந்த திட்டத்தில் 2025-2026ம் நிதியாண்டில் 200 மையங்கள் நிறுவப்படும்.
* 75000 புதிய மருத்துவ இடங்கள்
அடுத்த ஆண்டு நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 10ஆயிரம் மருத்துவ இடங்கள் சேர்க்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 75ஆயிரம் புதிய மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை விரிவுபடுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
* 36 உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு
புற்றுநோய், அரிய நோய்கள் மற்றும் பிற கடுமையான நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 36 உயிர்காக்கும் மருந்துகள் அடிப்படை சுங்க வரியில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்ட மருந்துகளின் பட்டியலில் சேர்ப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. 5 சதவீத சலுகை சுங்க வரியை ஈர்க்கும் பட்டியலில் ஆறு உயிர்காக்கும் மருந்துகள் சேர்க்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். மருந்து நிறுவனங்களால் நடத்தப்படும் நோயாளி உதவித்திட்டங்களின் கீழ் குறிப்பிடப்பட்ட மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படுகின்றது. நோயாளிகளுக்கு மருந்துகள் இலவசமாக வழங்கப்படும். 13புதிய நோயாளி உதவித்திட்டங்களுடன் கூடுதலாக 37 சதவீத மருந்துகளை சேர்ப்பதற்கும் பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டுள்ளது.
* தேர்தல் செலவினங்களுக்காக சட்டத்துறைக்கு ரூ. 1400 கோடி
சட்ட அமைச்சகத்தில் உள்ள சட்டமன்ற துறை, தேர்தல் ஆணையம், தேர்தல் , தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் குழுவுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான நோடல் ஏஜென்சியாகும். பட்ஜெட்டில் சட்ட அமைச்சகத்துக்கு மக்களவை தேர்தலுக்கு ரூ.500கோடியும், வாக்காளர்களுக்கான அடையாள அட்டைக்கு ரூ.300கோடியும், பிற தேர்தல செலவினங்களுக்கு ரூ.597.80கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் கண்காணிப்பு அமைப்பினால் தனியாக புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்குவதற்காக ரூ.18.72கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* 11% மொத்த வரி வசூல் அதிகரிக்கும்
பட்ஜெட்டில் அடுத்த நிதியாண்டில் மொத்த வரி வருவாய் ரூ. 42.70 லட்சம் கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது நடப்பாண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளை விட 11 சதவீதம் அதிகம். நடப்பு நிதியாண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி, மொத்த வரி வருவாய் ரூ. 38.44 லட்சம் கோடி. அடுத்த நிதியாண்டில் தனிநபர் வருமான வரி 14.4 சதவீதம் அதிகரித்து ரூ. 14.38 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெருநிறுவன வரி 10.4 சதவீதம் அதிகரித்து ரூ. 10.82 லட்சம் கோடியாக இருக்கும். ஜிஎஸ்டி வருவாய் 11 சதவீதம் அதிகரித்து ரூ. 11.78 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதர மூலதன வருவாய்கள் (முதலீடுகளை திரும்ப பெறுதல், பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்றல் உட்பட) ரூ. 47,000 கோடியாக இருக்கும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நடப்பாண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டை (ரூ. .33,000 கோடி) விட அதிகம்.
The post ஒன்றிய பட்ஜெட் 2025 ரூ. 140 லட்சம் கோடி புதிய கடன்: பிறக்கும் குழந்தைக்கு கூட ரூ. 1.4 லட்சம் கடன் சுமை; பாஜ ஆட்சியின் சாதனை appeared first on Dinakaran.