சென்னை: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையடுத்து சென்னையின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சாலையில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவின் பேரன் திருமணம் மாமல்லபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதில், பங்கேற்க துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் நேற்று சென்னை வருவதை அடுத்து, நேற்று மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை விமான நிலையத்திலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள், பழைய மகாபலிபுரம் சாலையை மாற்றுப் பாதையாகப் பயன்படுத்தி தங்கள் இலக்கை அடையலாம் என்று பெருநகர போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்திருந்தது. வணிக வாகனங்கள் விமான நிலையம் முதல் இசிஆர் வரை உள்ள சாலையைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு சென்னை வருகை தந்தார். அவரை வரவேற்க பாஜ தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூடியதாலும் சென்னை விமான நிலையம் முதல் பட் ரோடு வரை ஆங்காங்கே நின்று வரவேற்பு கொடுத்தாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் அனைவரும் பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் நேரத்தில் முக்கிய சாலைகளான கிழக்கு கடற்கரை சாலை, விமான நிலைய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால் போக்குவரத்து திக்குமுக்காடியது. வழக்கமாக பணி முடிந்து 30 நிமிடங்களில் வீட்டிற்கு செல்லக்கூடியவர்கள் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு இடையில் நேற்று நீண்ட நேரத்திற்கு பிறகு வீட்டிற்கு சென்றனர். சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதையடுத்து வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.
The post ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையடுத்து சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.