சென்னை: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு மாற்றாதாய் மனப்பான்மையுடன் புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு ஜவாஹிருல்லா எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளார். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது என்ற பழமொழிக்கு ஒப்ப ஒன்றிய அரசின் பட்ஜெட் அமைந்துள்ளது. இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படாதது கடும் கண்டனத்துக்குரியது.
பீகார் மாநிலத்திற்கு தேர்தல் வரவிருப்பதால் நிறைய திட்டங்கள் அந்த மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டிற்கு நெடுஞ்சாலைகள் குறித்து ரயில்வே அறிவிப்புகள் குறித்து எதுவும் புதிதாக வழங்கப்படவில்லை. ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை என்பதைப் போல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரி வாரி வழங்கிவிட்டு ஏழைகள் விவசாயிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு வெறும் வார்த்தைகளை தவிர உருப்படியான திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களின் முதலீடுகள் பெரிய அளவில் நாட்டிற்கு இல்லாத போது கூடுதல் உற்பத்தி ஏற்றுமதியில் அரசு கவனம் செலுத்தவில்லை. ஏற்றுமதி 20 சதவீதத்திற்கும் குறைவாகவும் 4.8 சதவீத நிதி பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது ஒன்றிய அரசின் கையாலாகாதத் தனத்தை மெய்ப்பித்திருக்கிறது. விலைவாசி குறைப்பு பெட்ரோல் டீசல் விலை குறைப்பிற்கான எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. விவசாயிகளின் முன்னேற்றத்திற்கும் எந்த அறிவிப்பும் இருப்பதாக தெரியவில்லை. மொத்தத்தில் இந்த பட்ஜெட் இந்திய மக்களை வெறும் வார்த்தைகளால் ஏமாற்றி இருக்கும் வார்த்தைகள் நிரம்பிய கோப்பு அவ்வளவே. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் புறக்கணிப்பு: மமக தலைவர் ஜவாஹிருல்லா கடும் கண்டனம் appeared first on Dinakaran.