சென்னை: ஒன்றிய அரசின் பட்ஜெட் எதிரொலியாக தங்கம் விலை நேற்று இரண்டு முறை உயர்ந்து ஒரு பவுன் ரூ. 62,320 விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. இந்த அதிரடி விலையேற்றம் நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதை பார்க்க முடிகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒரு பவுன் தங்கம் ரூ. 50 ஆயிரத்தை கடந்தது. தொடர்ந்து செப்டம்பர் மாதம் ரூ. 56 ஆயிரத்தை தாண்டியது. இந்த விலை உயர்வு நிற்காமல் தொடர்ந்து உயர்ந்து வருவதை பார்க்க முடிந்தது.
கடந்த ஆண்டு இறுதியில் ரூ. 59 ஆயிரம் முதல் ரூ. 60 ஆயிரம் வரையிலான இடைப்பட்ட விலையிலேயே தங்கம் விலை காணப்பட்டது. எப்போது வேண்டுமானாலும் ரூ. 60 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுவிடும் என எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 22ம் தேதி அந்த நிலையையும் எட்டியது. அன்றைய தினம் தங்கம் விலை பவுன் ரூ. 60,200க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் யாரும் எதிர்பாராத வகையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. நேற்று முன்தினம் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 960 உயர்ந்து, ஒரு பவுன் ரூ. 61,840க்கு விற்பனையானது.
இதன் மூலம் தங்கம் விலை இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மாதத்தின் தொடக்க நாளான நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது. அதாவது, நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ. 15 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 7,745க்கும், பவுனுக்கு ரூ. 120 உயர்ந்து ஒரு பவுன் ரூ. 61,960 என்ற புதிய உச்சத்தையும் பதிவு செய்தது. இந்த நிலையில் ஒன்றிய அரசின் 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதன் எதிரொலியாக தங்கம் விலை நேற்று மாலை வழக்கத்திற்கு மாறாக தங்கம் விலை அதிகரித்ததை காணமுடிந்தது.
வழக்கமாக கடந்த சில மாதங்களாக காலையில் என்ன விலையில் தங்கம் விற்கிறதோ? அதே விலை தான் மாலையிலும் நீடிக்கும். ஆனால், நேற்று பட்ஜெட் தாக்கத்தின் காரணமாக மாறாக மாலையிலும் தங்கம் விலை அதிகரித்ததை காண முடிந்தது. அதாவது நேற்று காலையில் விற்பனையான தங்கத்தை விட மாலையில் கிராமுக்கு ரூ. 45 உயர்ந்து உயர்ந்து ஒரு கிராம் ரூ. 7,790க்கும், பவுனுக்கு ரூ. 360 உயர்ந்து ஒரு பவுன் ரூ. 62,320க்கு விற்பனையாகி தங்கம் விலையில் வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற உச்சத்தை பதிவு செய்தது. நேற்று மட்டும் தங்கம் விலை காலை, மாலை என பவுனுக்கு ரூ. 480 உயர்ந்து அதிர்ச்சி வைத்தியம் படைத்துள்ளது.
அது மட்டுமல்லாமல் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் நேற்று வரை மட்டும் ஒரு மாதத்தில் தங்கம் விலை ஜெட் வேகத்தில் பவுனுக்கு ரூ. 5120 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படியே விலை அதிகரித்து வந்தால் தங்கம் விலை எட்டா கனியாகிவிடுமோ? என்ற அச்சம் நடுத்தர மக்களிடையே நிலவியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை(திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.
The post ஒன்றிய அரசின் பட்ஜெட் எதிரொலி காரணமாக ஒரே நாளில் தங்கம் விலை ரூ. 480 உயர்ந்தது: பவுன் ரூ. 62 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம்; நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி appeared first on Dinakaran.