சென்னை: ஒன்றிய அரசிடம் வருவாயை மறைத்ததாக சென்னையில் பாலிஹோஸ் இந்தியா ரப்பர் பிரைவேட் லிமிடெட் தொடர்புடைய நிறுவனங்களுக்கு சொந்தமான 20 இடங்களில் 2வது நாளாக நேற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையை தலைமையிடமாக கொண்டு பாலிஹோஸ் இந்தியா ரப்பர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் சுவிட்சர்லாந்து நாட்டின நிறுவனம் இடால் பிளாஸ்டிக் காம்பவுண்டஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து பொருட்களை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சபீர் யூசப் சென்னை அபிராமபுரம் ஏ.பி.எம். அவென்யூ கிரசன்ட் தெருவில் வசித்து வருகிறார். பாலிஹோஸ் நிறுவனத்தின் தொழிற்சாலைகள் காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில் உள்ள சிப்காடு, அம்பத்தூர் தொழிற்பேட்டை, வல்லம், மாம்பாக்கம், திருப்போரூர் பகுதிகளில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் கிண்டியில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் பெட்ரோல் பங்கில் பயன்படுத்தப்படும் பைக் மற்றும் டியூப்புகள், கனரக வாகனங்களுக்கு தேவையான ரப்பர் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்து வருகிறது.
தனது தொழிற்சாலைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு முறையாக ஒன்றிய அரசுக்கு கணக்கு காட்டாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பாலிஹோஸ் நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலைகள், அலுவலகங்கள், உரிமையானர் வீடுகளில் நேற்று முன்தினம் காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தினர். நேற்று 2வது நாளாக சோதனை நீடித்தது. அதேபோல், சென்னை அடுத்த வேலப்பன்சாவடியில் இயங்கி வரும் எம்.ஆர்.எம். கட்டுமான நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் சுஜித் முகர்ஜி வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.
மேலும், செங்கல்பட்டு பகுதியில் இயங்கி வரும் வெற்றி ரியல்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 2வது நாளாக நடந்த சோதனையில் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஆவணங்கள், பங்கு முதலீட்டு ஆவணங்கள், ரொக்கம் பணம், கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை முடிவிற்கு பிறகு தான் இந்த நிறுவனங்கள் எத்தனை கோடி மோசடி செய்துள்ளது என தெரியவரும் என்று வருமான வரித்துறை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
The post ஒன்றிய அரசிடம் வருவாயை மறைத்ததாக பாலிஹோஸ் இந்தியா நிறுவனங்களில் 2வது நாளாக வருமானவரி சோதனை: ஏற்றுமதிக்கான ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணை appeared first on Dinakaran.