ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அம்பேத்கரை விமர்சித்த போது ஆளுநர் எங்கே போனார்? அமைச்சர் கோவி.செழியன் கேள்வி

1 month ago 7

சென்னை: உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று வெளியிட்ட அறிக்கை: அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவில் பேசிய ஆளுநர் ரவி, அபத்தமான கருத்துகளை வெளியிட்டிருக்கிறார். சமூக நீதி குறித்துப் பேசும் இந்த மாநிலத்தில் செருப்பு போட்டுச் செல்வதற்காகவும், இரு சக்கர வாகனத்திற்காகவும் தலித்துகள் தாக்கப்படுகின்றனர்’ என பச்சை பொய்யை சொல்லியிருக்கிறார் ஆளுநர். உங்கள் சொந்த மாநிலத்தில் தலித்துகளுக்கு எதிராக அநீதி நடந்து கொண்டிருக்கும் போது தமிழ்நாட்டைப் பற்றிப் பேச ஆளுநருக்கு தகுதி இருக்கிறதா?

ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கரை பற்றிச் சொன்னது உங்களுக்கு நினைவில் இருக்கிறதா ஆளுநரே ‘’இந்தக் காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என அவரின் பெயரைக் கோஷமிடுவது பேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்குப் பகவானின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்குச் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும் என அமித்ஷா நாடாளுமன்றத்தில் சொன்ன போது நாடு முழுவதும் கொந்தளிப்பு எழுந்தது.

அம்பேத்கர் தலித் தலைவர் அல்ல, அவர் பாரதத் தாயின் மகன் என இன்றைக்குச் சொல்லும் ஆளுநர் அமித்ஷா சொன்ன போது ராஜ்பவனின் தர்பார் மண்டபத்தில் ஒரு கண்டன கூட்டத்தை ஏன் நடத்தவில்லை? அமித்ஷா சொல்வது போல உங்களுக்கும் அம்பேத்கர் பெயரைக் கோஷமிடுவது பேஷனாகிவிட்டதா? ஆரியம் பேசும் நீங்கள் அம்பேத்கரை போற்றி பாடுகிறீர்கள். அம்பேத்கரை பற்றிப் பேசவோ திராவிடத்தைத் தூற்றவோ உங்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது.

The post ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அம்பேத்கரை விமர்சித்த போது ஆளுநர் எங்கே போனார்? அமைச்சர் கோவி.செழியன் கேள்வி appeared first on Dinakaran.

Read Entire Article