![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/02/37130805-vijy.gif)
சென்னை,
தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஓர் ஆண்டு நிறைவடைந்ததையொட்டி, இன்று தனது கட்சி தலைமையகத்தில் கொடி ஏற்றி, கொள்கைத் தலைவர்களின் சிலைகளை விஜய் திறந்து வைத்தார். தொடர்ந்து வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிகாரப் பகிர்வுடன் ஆகப்பெரும் ஜனநாயகப் பெருநிகழ்வை உருவாக்கிக் காட்டுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த சூழலில் பல்வேறு அரசியல் தலைவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த தெலுங்கானா மற்றும் புதுச்சேரி முன்னாள் கவர்னரும், தமிழ்நாடு பா.ஜ.க. மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் தமிழக வெற்றிக் கழகம் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "இன்றோடு ஒரு வருஷம் ஆகுதா? Invisible-ஆ இருந்து ஒரு வருஷம் ஆகிவிட்டதா?.. Visible-ஆ வந்து எவ்வளவு வருஷம் என்று தெரியவில்லை. அவர் திரையில் Visible-ஆக இருக்கிறார், அவரது ரசிகர்கள் கோபித்து கொள்ளக் கூடாது. அவர் களத்திற்கு வந்து மக்கள் பணியாற்றினால் மகிழ்ச்சி.
"ஒவ்வொருத்தருக்கும் ஒரு பாணி உண்டு. அதுபோல விஜய்க்கு தொலைநோக்கில் தான் அரசியல் செய்ய வேண்டும். Work From Home மற்றும் இணையதளத்தில் தான் பணி செய்ய வேண்டும் என்று நினைத்தால் எதுவும் செய்ய முடியாது. எங்களைப் போன்ற தலைவர்கள், மக்களோடு மக்களாக பழகும் தலைவர்களே சரியான தலைவர்கள் என நினைக்கிறோம். அதனை விஜய் முடிவு செய்யட்டும்" என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
தொடர்ந்து மத்திய பட்ஜெட் குறித்து பேசிய அவர், "மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கும் சகோதர, சகோதரிகளுக்கு வரியே இல்லை என்பது வரி வரியாக கொண்டாடக்கூடிய பட்ஜெட். எது கொடுத்தாலும் பற்றாக்குறையாக தான் இருக்கும், எதற்கு கொடுத்தாலும் திருப்திகரமாக இருக்காது. மருத்துவத்துறை, வேளாண் துறை, நெசவாளர்கள் மாணவர்கள் மகளிர், இளைஞர்கள் முதியவர்கள் என எல்லாருக்குமான பட்ஜெட் இது. புதிதாக தொழில் தொடங்குவதற்கு அதிக அளவில் நிதி ஒதுக்கி உள்ளார்கள். இதனால் இளைஞர்கள் பெருமளவில் பயன்பெற உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்தவர் எட்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்வது சாதாரண விஷயம் அல்ல, அதிலும் அழகாக திருக்குறளை முன்னெடுத்து இருக்கிறார். இதனால் தமிழர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும்" என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.