ஒட்டுமொத்த விவசாயிகள் பயனடைகிற வகையில் நிதிநிலை அறிக்கை - செல்வப்பெருந்தகை பாராட்டு

3 hours ago 2

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு அரசின் 2025-26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்மைத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ரூபாய் 45,661 கோடிக்கு நிதி ஒதுக்கி சமர்ப்பித்திருக்கிறார். இதில் விவசாயிகள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியை கோரி விவசாயிகள் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். ஆனால், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதற்கோ, பயிர்க் கடனை தள்ளுபடி செய்வதற்கோ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், தமிழ்நாடு அரசு விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யும் திட்டத்தின்கீழ் தற்போது வரை ரூபாய் 10,341 கோடி தள்ளுபடி செய்துள்ளது. வரும் நிதியாண்டில் ரூபாய் 1427 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தெளிவான விவசாயக் கொள்கையின் காரணமாக தமிழ்நாட்டின் சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. தி.மு. கழக அரசு செயல்படுத்திய திட்டங்களினால் 346 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுளில் 1.86 லட்சம் மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி வந்தது நடைமுறையில் உள்ளதால் புதிய மின் இணைப்புகள் மறுக்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது மின் இணைப்புகள் வழங்கப்பட்டு விவசாயிகளுக்கு பாசன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, விவசாயிகளுக்கு பயிர்க்கடன் அளவு கடந்த ஆண்டு 1.83 லட்சம் கோடியாக இருந்தது, நடப்பாண்டில் 3.58 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. விவசாயிகளுக்கு கடன் வழங்குவதால் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளது. அதேபோல, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலையின் அடிப்படையில் நேரடி கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகளுக்கு நியாய விலை கிடைப்பதால் நெல் உற்பத்தியில் தமிழ்நாடு மகத்தான சாதனை செய்து வருகிறது. 30 லட்சம் விவசாயிகளுக்கு கடந்த 4 ஆண்டுகளில் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளில் நெல் விவசாயிகளுக்கு ரூபாய் 1452 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூபாய் 215 ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விவசாயிகள் பயனடைகிற வகையில் உறுதியான வாழ்வாதாரத்தை ஏற்படுத்துகிற வகையில் வேளாண் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்ததற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும் , வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தையும் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article