ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே கேரளாவில் இருந்து மீன், நண்டு இறைச்சி கழிவுகள் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே சத்திரப்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். சுகாதார ஆய்வாளர். இவர் நேற்று முன்தினம் மாலை டூவீலரில் ஒட்டன்சத்திரம் – பழநி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற ஒரு லாரியிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவர், சத்திரப்பட்டி சுங்கச்சாவடி அருகே லாரியை மறித்து நிறுத்தியுள்ளார்.
லாரியை சோதனையிட்டபோது அதில் மீன் மற்றும் நண்டு இறைச்சி கழிவுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து சத்திரப்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார், லாரி டிரைவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த வினு (35) என்பவரிடம் விசாரணை நடத்தினர். இதில் கேரள மாநிலம், பாலக்காட்டில் இருந்து தூத்துக்குடிக்கு மீன், நண்டு இறைச்சி கழிவுகளை கொண்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
The post ஒட்டன்சத்திரம் அருகே இறைச்சி கழிவுகளுடன் வந்த கேரள மாநில லாரி பறிமுதல் appeared first on Dinakaran.