புவனேஷ்வர்,
வங்கக்கடலில் கடந்த 21-ந் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது தாழ்வு மண்டலம், தீவிர தாழ்வு மண்டலமாக வலுவடைந்து பின்னர் நேற்று முன் தினம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு டானா என்று பெயரிடப்பட்டது. டானா புயல் காரணமாக பல்வேறு மேற்கு வங்காளம், ஒடிசா உள்பட பல்வேறு மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
இந்நிலையில், டானா புயல் தற்போது ஒடிசா கடற்பகுதியில் கரையை கடக்க தொடங்கியுள்ளது. புயல் கரையை தொடங்கிய நிலையில் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களான பஹ்டர்க், கெண்ட்ரபெரா, பாலசோரா, ஜெகத்சிங்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 100 முதல் 110 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் இன்று காலை பிதர்ஹனிகா என்ற பகுதியில் புயல் கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.