சென்னை: ஒசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் மொபைல் போன் உற்பத்தி ஆலை விரிவாக்கத்திற்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது. தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 2030க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மாற்றம் பெறுவதற்கும் தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஓசூரில் ரூ. 3051 கோடி முதலீட்டில் செயல்பட்டு வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலை மேலும் ரூ. 3,699 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தொழிற்சாலை மூலம் 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் விண்ணப்பித்துள்ள நிலையில், அதற்கான அனுமதியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் வழங்கியுள்ளது.
இதன் மூலம் தற்போது 1.49 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் ஏற்கனவே ஆலை செயல்பட்டு வரும் நிலையில் 5 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. அதே போல இந்த தொழிற்சாலையில் தினசரி 92,000 மொபைல் போன்கள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், தினசரி 2 லட்சம் மொபைல் போன்களை உற்பத்தி செய்யும் வகையில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் ‘ஆப்பிள் ஐபோன்’ உற்பத்தி செய்ய டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The post ஒசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் மொபைல் போன் உற்பத்தி ஆலை விரிவாக்கத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு..!! appeared first on Dinakaran.