
மேட்டூர்,
கர்நாடகா, கேரளா மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டியது.
இந்த இரண்டு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கர்நாடக- தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு கரைபுரண்டு வந்தது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த சூழலில் கர்நாடகா மாநில அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு 21 ஆயிரத்து 670 கன அடியாக குறைக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்தும் படிப்படியாக குறைய தொடங்கியது. நேற்று முன்தினம் காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 43 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.
இந்த நீர்வரத்து மேலும் குறைந்து மாலை 4 மணி நிலவரப்படி 28 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இந்த நீர்வரத்து இரவு 7 மணி நிலவரப்படி 23 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இருப்பினும் ஒகேனக்கல் ஐந்தருவி, சினி பால்ஸ் ஆகிய அருவிகளை மூழ்கடித்தபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தை மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் பிலிகுண்டுலுவில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். போலீசார், ஊர்க்காவல் படையினர், வருவாய் துறையினர் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை பொறுத்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் வருகிறது. கடந்த 1-ந் தேதி அணைக்கு வினாடிக்கு 56 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து நேற்று முன் தினம் காலை குறைந்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடியானது. மாலையில் அது மேலும் குறைந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி இருப்பதால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்று முன் தினம் மாலை அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி வீதமும், டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கனஅடி வீதமும் நீர்மின் நிலையங்கள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. மீதமுள்ள 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டது.
இந்நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தற்போது மீண்டும் அதிகரித்து, வினாடிக்கு 28,000 கன அடியாக உயர்ந்துள்ளது. பாதுகாப்பு கருதி அருவி மற்றும் ஆற்று பகுதியில் குளிக்கவும் பரிசல் சவாரி மேற்கொள்ளவும் விதிக்கப்பட்ட தடை 10-வது நாளாக நீடிக்கப்பட்டுள்ளது.