பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் அதிபராக உள்ள இம்மானுவேல் மேக்ரோனின் பதவி காலம் வரும் 2027ல் முடிவடைகிறது. இம்மானுவேல் மேக்ரோனுக்கு போட்டியாக தீவிர வலது சாரி கட்சி தலைவர் மெரீன் லீ பென் கடுமையான பிரசாரம் செய்து வந்தார். கடந்த 2017 மற்றும் 2022 தேர்தல்களில் மேக்ரோனுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளை பெற்று மெரீன் லீ பென் 2 ம் இடத்தை பிடித்தார். மெரீன் லீ பென் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். அப்போது, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
கடந்த 2024 முதல் நடந்து வந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.நிதி மோசடி செய்த வழக்கில் அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதில் 2 ஆண்டுகள் வீட்டு காவலில் வைக்கப்படுவார். இந்த தண்டனையை அடுத்து அவர் 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது என நீதிபதி தெரிவித்தார். மெரீன் லீ பென்னின் உதவியாளர்கள் 12 பேருக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பு லீ பென்னின் அரசியல் வாழ்வுக்கு கிடைத்த மிக பெரிய பின்னடைவாகும். மேலும் அவருடைய அரசியல் எதிர்காலத்துக்கு மிக பெரிய கேள்விக்குறியாக்கி உள்ளது. லீ பென்னின் தீவிர ஆதரவாளரான ஜோர்டான் பர்டெல்லா(29) அவருக்கு பதிலாக அதிபர் தேர்தலில் தேசிய பேரணி கட்சி சார்பில் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post ஐரோப்பிய ஒன்றிய நிதி மோசடி வழக்கில் பிரான்ஸ் வலது சாரி கட்சி தலைவருக்கு 4 ஆண்டு சிறை: 5 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை appeared first on Dinakaran.