
புதுடெல்லி,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் போரல், பாப் டு பிளஸ்சிஸ் இருவரும் சிறப்பாக விளையாடி அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.
இருவரும் முறையே 28 மற்றும் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய கருண் நாயர் 4 ரன்களில் வெளியேற அடுத்து வந்த கே.எல். ராகுல் அதிரடியாக விளையாடி 41 ரன்கள் எடுத்தார்.அக்சர் படேல் 15 ரன்களிலும், இம்பேக்ட் வீரராக களமிறங்கிய அசுதோஷ் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 34 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணி சார்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளும், ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி பேட்டிங் செய்தது.
தொடக்கத்தில் ஜேக்கப் பெத்தேல் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் படிக்கல் ரன் எதுவும் எடுக்காமல் , ரஜத் படிதார் 6 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர் .
தொடர்ந்து விராட் கோலி, குருனல் பாண்டியா இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர் . பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர் . நிலைத்து ஆடிய இருவரும் அரைசதம் அடித்தனர். பின்னர் விராட் கோலி 51 ரன்களுக்கு வெளியேறினார் . தொடர்ந்து டிம் டேவிட் பொறுப்புடன் ஆடி ரன்கள் குவித்தார் .
இறுதியில் பெங்களூரு அணி 18.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது . இதனால் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி பெற்றது.