ஐபிஎல் 43வது லீக் போட்டியில் சென்னைக்கு எதிராக சன்ரைசர்ஸ் அசத்தல் வெற்றி

10 hours ago 2

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி அபாரமாக ஆடி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் 18வது தொடரின், 43வது லீக் போட்டி சென்னையில் நேற்று நடந்தது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து களமிறங்கிய சென்னை அணியின் துவக்க வீரர் ஷேக் ரஷீத், முகம்மது ஷமி நேர்த்தியாக வீசிய முதல் பந்தில், அபிஷேக் சர்மாவிடம் கேட்ச் தந்து ரன் எடுக்காமல் அவுட்டானார். பின், மற்றொரு துவக்க வீரர் ஆயுஷ் மாத்ரேவுடன் சாம் கரன் இணை சேர்ந்தார். துவக்கம் முதல் திணறிக்கொண்டிருந்த சாம் கரன்(9 ரன்), ஹர்சல் படேல் வீசிய 5வது ஓவரில் வர்மாவிடம் கேட்ச் தந்து ஆட்டமிழந்தார். பின், ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார்.

அடுத்த ஓவரை வீசிய சன்ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ், சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த மாத்ரேவை (19 பந்து, 30 ரன்), வீழ்த்தினார். அதையடுத்து, சென்னை அணியில் புதிதாக சேர்ந்த தென் ஆப்ரிக்க வீரர் டெவால்ட் புரூவிஸ் களமிறங்கினார். இவர்கள் நிதானமாக சிறந்ததொரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி கொண்டிருந்த சமயத்தில், 10வது ஓவரை வீசிய கமிந்து மென்டிஸ், ஜடேஜாவை (21 ரன்), கிளீன் போல்டாக்கி வெளியேற்றினார். அதன் பின் வந்த சிவம் தூபே (12 ரன்), புரூவிஸ் (42 ரன்), தோனி (6 ரன்), அன்சுல் கம்போஜ் (2 ரன்), நுார் அகமது (2 ரன்) என சீரான இடைவெளியில் அடுத்தடுத்து அவுட்டாகினர். கடைசி ஓவரின் 5வது பந்தில், தீபக் ஹூடாவும் (22 ரன்) வீழ்ந்தார். அதனால், 19.5 ஓவரில், சென்னை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 154 ரன் மட்டுமே எடுத்திருந்தது.

சன்ரைசர்ஸ் தரப்பில், ஹர்சல் படேல் 4, ஜெய்தேவ் உனத்கட், பேட் கம்மின்ஸ் தலா 2, மென்டிஸ், ஷமி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அதையடுத்து, 155 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது. துவக்க வீரர்களாக அபிஷேக் சர்மா ட்ராவிஸ் ஹெட் களமிறங்கினர். அபிஷேக், முதல் ஓவரில் ரன் எடுக்காமல் அவுட் ஆனார். ஹெட் 19 ரன்னில் கிளீன் போல்ட் ஆனார். பின் வந்தோரில் இஷான் கிஷன் சிறப்பாக ஆடி 44 ரன் குவித்து அவுட் ஆனார். 5வது விக்கெட்டாக அனிகேத் வர்மா 19 ரன்னில் ஆட்டம் இழந்தார். 18.4 ஓவரில் சன்ரைசர்ஸ் 155 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில அபார வெற்றி பெற்றது.

The post ஐபிஎல் 43வது லீக் போட்டியில் சென்னைக்கு எதிராக சன்ரைசர்ஸ் அசத்தல் வெற்றி appeared first on Dinakaran.

Read Entire Article